‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் முரசொலி இதழில் நடிகர் ரஜினிகாந்த் எழுதிய சிறப்புக் கட்டுரையில் எம்.ஜி.ஆர், கலைஞர் இடையேயான மோதல் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
கலைஞர் நூற்றாண்டை ஒட்டி முரசொலி நாளிதழில் ‘தமிழ்த்திரை உலகத்தின் பார்வையில் கலைஞர்' என்ற தலைப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞர் கருணாநிதி பற்றி கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார். அதில் கலைஞர் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ள ரஜினிகாந்த். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இடையேயான பிரிவு குறித்தும் எழுதி உள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது : பல நேரங்களில் நான் அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் எந்த ஒரு விஷயத்திற்கும் நான் அவரை கவனித்து பார்த்ததில் எந்த ஒரு முடிவையும் எடுத்தோமா கவிழ்த்தோமா என்று எடுக்கமாட்டார். அதற்கு சம்மந்தப்பட்டவர்களின் பல பேருடன் விசாரித்து, பேசி, விவாதித்துதான் எந்த ஒரு முடிவையும் எடுப்பார். அப்படி இருக்கும் போது எம்.ஜி.ஆர் அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் முக்கியமான முடிவை நிச்சயம் கலைஞர் அவர்கள் பல பேரின் ஆலோசனைகளை கேட்டுதான் எடுத்திருப்பார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
எனக்கு தெரிந்த ஒருவர். அவர் பெயர் கூற இயலாது. அவர் எனக்கு ஒரு ஆடியோ கேசட்டை கொடுத்து “இதை யாரிடமும் கொடுக்க வேண்டாம். நீங்கள் மட்டும் கேட்டு பிறகு என்னிடமே திருப்பிக்கொடுத்து விடுங்கள்” என்று கூறினார். அது 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு அவர்க்கும் திரு. எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுக்கும் நடந்த தொலைப்பேசி உரையாடல் ஆகும்.
அதில் திரு. எஸ்.எஸ்.ஆர். அவர்கள் “அண்ணே... ஏதோ கெட்ட நேரம் அவசர அவசரமாக என்னென்னமோ நடந்து விட்டது. வருங்காலத்தில் கழகத்திற்கு இதனால் பெரிய இழப்பு ஏற்படும். வேறு யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டும் ஒரு பொது இடத்தில் சந்தித்து மனம் விட்டுப்பேசினால் எல்லாம் சரி ஆகிடும். கலைஞரிடம் நான் பேசுகிறேன். எனக்காக இதை செய்யுங்கள்” என்று கூறுவார்.
அதற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் “இல்லை தம்பி.. என்னுடைய விசுவாசிகள் எனக்கு ஆதரவாக போராட்டங்கள் செய்து என்னுடைய அபிமானிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு விட்டார்கள். நான் திரும்பி கட்சியில் சேர்ந்தால் என்னுடைய அபிமானிகளை கட்சியில் உள்ளவர்கள் முந்தைய மாதிரிப் பார்க்க மாட்டார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவார்கள் அவர்கள் எல்லாம் உதிரிப்பூக்கள் ஆகிவிடுவார்கள். அவர்களுக்காகவே நான் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும். எனக்கு வேறு வழியில்லை. தப்பாக நினைத்துக் கொள்ளாதே” என்று அந்த உரையாடல் முடிந்திருக்கும்.
அதன் பின் எம்.ஜி.ஆர். அவர்கள் அ.தி.மு.க. என்ற கட்சியை உருவாக்கினார். அதன் பின் யார் யார் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று சொன்னார்களோ.. அதில் பல பேர் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகி எம்.ஜி.ஆர். பக்கம் போனார்கள். அதனால் கலைஞரின் இதயம் எவ்வளவு வேதனையில் துடித்திருக்கும்?
எதையும் தாங்கும் இதயம் என்று அண்ணா இவரை நினைத்து தான் சொன்னாரோ? எவ்வளவு வேதனைகள், சங்கடங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள் என அத்தனையும் தாண்டி தொண்டர்களுக்கு அவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், கட்டுரைகள், சினிமாவில் எழுதிய வசனங்கள், அவர் செய்த சுற்றுப்பயணங்கள், மேடைப்பேச்சுகள், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்றாலும் கட்டுக் கோப்பாக, ஒரு தனி ஆளாக கட்சியை வழி நடத்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால் அது ஒரு மாபெரும் புரட்சி.
அவரைப்பற்றி எழுதினால் எழுதிக்கொண்டே போகலாம். அவருடைய இந்த நூற்றாண்டில் அவரை நினைத்து, அவருடன் நான் கழித்த எத்தனையோ தருணங்களை ஞாபகப்படுத்தி, அவர் வாழ்ந்த அதே காலத்தில் நானும் வாழ்கிறேன், அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால்தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது" என ரஜினி அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கருணாநிதி வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன்? பல வருட ரகசியத்தை உடைத்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்