தேர்தல் விதியை மீறி அத்துமீறி நுழைந்த ஸ்ருதிஹாசன்..! பாஜகவினர் பரபரப்பு புகார்!

By manimegalai aFirst Published Apr 7, 2021, 5:52 PM IST
Highlights

நடிகை ஸ்ருதிஹாசன்  தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
 

நடிகை ஸ்ருதிஹாசன்  தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகவும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் தேர்தல் அலுவலரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் 88,394 வாக்குச்சவாடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு நிறைவடைந்தது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து  வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிகளை மீறியதாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் மீது பாஜகவினர் தேர்தல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் வாக்குசாவடிகளை பார்வையிட சென்றபோது, அவரது மகள் ஸ்ருதிஹாசனும் உடன் சென்று இருந்தார். வாக்குசாவடிகளுக்குள் வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து பிறர் செல்ல கூடாது என்ற விதியை மீறி, வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்தார் என்றும் இது விதிமீறல் என்பதால் அவர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி பாஜக தலைமை ஏஜென்ட் நந்தகுமார் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளபோது, தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஸ்ருதிஹாசன் அத்துமீறி வாக்குச்சாவடிக்குள் நுழைந்துள்ளார். இதுசட்டப்படி குற்றமாகும். தேர்தல் விதிமுறை மீறல் படி ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

click me!