மறைந்த மயிலுக்கு இன்று இறுதிச்சடங்கு…. ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டு வர அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் சென்றது!!

First Published Feb 26, 2018, 6:40 AM IST
Highlights
Sri Devi expired in dubai today funeral in Mumbai


துபாயில் மரணமடைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவிக்கு இன்று  இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர தொழிலதிபர் அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் புறப்பட்டுச் சென்றுள்ளது.

தமிழ் மொழியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி, தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கமல், ரஜினி, சிரஞ்சீவி, ரிஷிகபூர் மற்றும் ராஜ்கபூர் என இந்திய சினிமாவில் பல உச்சநட்சத்திரங்களுடன் நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்.



பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்த பின் படங்களில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஸ்ரீதேவி, 2012 ஆம் ஆண்டு வெளியான இங்கிலீஸ் விங்கிலீஸ் படத்தின் மூலம் திரையுலகிற்கு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன்பின், தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

துபாயில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்ரீதேவி, அவரது கணவர் போனி கபூர், மகள் குஷி கபூர் ஆகியோருடன்  சென்றிருந்தார், அப்போது சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தேவிக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அகால மரணமடைந்தார்.

துபாயில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றே  சிறப்பு விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடயவியல் துறையின் சான்றிதழ் உடனடியாக கிடைக்காததால், உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து  தேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. தொடர்ந்து  ஸ்ரீதேவியின் இறப்பு சான்றிதழ் மருத்துவமனையில் அளிக்கப்படும் என்றும்,  உடலைப் பெற அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

.இந்நிலையில் துபாயில் இருந்து இந்தியா கொண்டு வரப்படும் தேவியின்  உடல் மும்பை கிரீன் ஏக்கர்ஸ்  இல்லத்தில் இன்று பொது மக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து  இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  துபாயில் இருந்து தேவியின் உடலைக் கொண்டு வர அனில் அம்பானியின் தனி விமானம் துபாய் புறப்பட்டுச் சென்றது.

ஸ்ரீதேவியின் மறைவையடுத்து அவரது மும்பை இல்லம் முன்பு ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் குழுமியுள்ளனர்

click me!