ஹெச்.ராஜாவை விட ஒரு ஓட்டு அதிகம் போதுமாம்...கமலின் சிவகங்கை வேட்பாளர் ‘உயர்திரு 420’ சிநேகன் சில குறிப்புகள்...

By Muthurama LingamFirst Published Mar 25, 2019, 11:28 AM IST
Highlights

‘வெற்றி பெறுகிறீர்களோ இல்லையோ அங்கு போட்டியிடும் ஹெச். ராஜாவை விட ஒரே ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கி கட்சியின் மானத்தைக் காப்பீராக’ என்று கமலால் ஆசிர்வதித்து அனுப்பப்பட்டுள்ள சிநேகன் குறித்து ஒரு சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

‘கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா?’ போன்ற உலகத்தரமான இலக்கியப்பாடல்களை தமிழ்சினிமாவுக்குத் தந்த செம்மல் கவிஞர் சிநேகம் மக்கள் நீதி மய்யத்தின் சிவகங்கை பாராளுமன்ரத் தொகுதி வேட்பாளராகக் கமலால் இரக்கப்பட்டு களம் இறக்கப்பட்டிருக்கிறார்.

‘வெற்றி பெறுகிறீர்களோ இல்லையோ அங்கு போட்டியிடும் ஹெச். ராஜாவை விட ஒரே ஒரு ஓட்டாவது அதிகம் வாங்கி கட்சியின் மானத்தைக் காப்பீராக’ என்று கமலால் ஆசிர்வதித்து அனுப்பப்பட்டுள்ள சிநேகன் குறித்து ஒரு சில தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிபட்டி அருகே உள்ள புதுக்காரியாபட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் சிவச்செல்வன் என்ற  சிநேகன். பரம ஏழையான விவசாய குடும்பத்தின் எட்டாவது பிள்ளை. மிக இளம் வயதிலேயே சினிமா ஆசையில் சென்னைக்கு மஞ்சப் பையுடன் கிளம்பிய சிநேகன் துவக்கத்தில் உதவியாளராக வேலை செய்தது கவிப்பேரரசு வைரமுத்துவிடம். அடுத்து சில கவிதைத் தொகுப்புகள் எழுதி தனியாகப் பாடல்கள் எழுத முயற்சித்து எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் ‘புத்தம் புது பூவே’ படத்துக்காக முதல் பாடல் எழுதுகிறார்.

அடுத்து இயக்குநர்கள் அமீர், சேரன் படங்களுக்கு பாடல்கள் எழுதி பிரபலமாகிறார். ஆட்டோகிராஃப்’படத்தின் ‘ஞாபகம் வருதே’ பாடல் சிநேகனை அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று பிரபல பாடலாசிரியராக்குகிறது. ஆனால் சிநேகனின் ஆசை வெறும் பாடலாசிரியராக இருப்பது மட்டுமல்ல. அமீரின் ‘யோகி’ படத்தில் நடிகராகவும் அறிமுகமாகும் அவர் அடுத்து ‘உயர்திரு 420’ என்ற படத்தில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுக்கிறார். படத்தின் பெயர்ப் பொருத்தத்தைப் புரிந்துகொள்ளாத தமிழர்கள் படுதோல்வியைப் பரிசாகத் தருகிறார்கள்.

ஆனால் ஹீரோ தாகம் தணியாத சிநேகன் அவ்வப்போது ‘ராஜராஜனின் போர்வாள்’,’சிங்கம்பட்டி ஜமீனின் சிறுவாள்’ போன்று ஏதாவது பட பூஜைகளைப் போட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கப்போய்விடுவார். அடுத்து கொஞ்சநாள் திருமண மண்டபங்களுக்கு வாண்டடாக விசிட் அடித்து கட்டிப்பிடி வைத்தியம் சொல்லித் தந்தார். கடைசியாக சிநேகன் செய்த மறக்கமுடியாத காரியம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ‘எழுந்திர்ச்சி வாங்கம்மா’ மாதிரி ஒரு கவிதை எழுதி அதை அழுகுரலில் படித்து வலைதளங்களில் உலவவிட்டது. அதிர்ஷ்டவசமாக  அந்த கவிதைக்காக ஜெவின் கொலைகாரர்கள் பட்டியலில் சிநேகன் பெயர் இடம் பெறவில்லை.

அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலுடன் இணைந்த சிநேகன், ஓவியாயுடன் ஒட்டிக்கொள்ளப்பார்த்தார்.விடுவாரா கமல் ? அவரை  அப்படியே அணைத்து கட்சியிலும் இணைத்து இன்று சிவகங்கையில் ஹெச். ராஜாவை எதிர்த்துப்போட்டியிடும் அதிர்ஷ்டசாலியாகியிருக்கிறார். 
 

click me!