தங்க மோசடி வழக்கு... பல மாதங்களுக்கு பிறகு மெளனம் கலைத்த பிரபல நடிகை...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 17, 2020, 6:34 PM IST
Highlights

சச்சின் ஜோஷியின் ஒரு கிலோ தங்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். அதற்கான சுணக்கக் கட்டணத்தை அவர் இன்னும் செலுத்தவில்லை.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக நடித்து வந்த ஷில்பா ஷெட்டி,  2009ம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். சத்யுக் கோல்டு பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குநர்களாக ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் இருந்து வந்தனர். 

அப்போது 2014ம் ஆண்டு வெளிநாடுவாழ் இந்தியரான சச்சின் ஜோஷி என்ற தொழிலபதிபர் அந்த நிறுவனத்தில் 5 திட்டம் ஒன்றில் தங்கம் வாங்குவதற்காக முதலீடு செய்துள்ளார். சுமார் 18 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் இணைந்த 5 ஆண்டு திட்டத்தின் படி அவருக்கு இறுதியில் தள்ளுபடி விலையில் குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொடுப்பதாக ஷில்பா ஷெட்டியின் நிறுவனம் வாக்குறுதி அளித்துள்ளது. 

எனவே அதை வாங்குவதற்காக மும்பை வந்த அவர், அந்த நிறுவனம் மூடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். விசாரித்ததில் ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் சில ஆண்டுகளுக்கு முன்பே ராஜினாமா செய்தது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சச்சின் ஜோஷி இதுகுறித்து போலீசில் மோசடி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

பல மாதங்களாக இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காத ஷில்பா ஷெட்டி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். சச்சின் ஜோஷியின் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது. சத்யுக் கோல்ட் நிறுவனத்தில் ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவையும் சரியான நேரத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சச்சின் ஜோஷியின் ஒரு கிலோ தங்கத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம். அதற்கான சுணக்கக் கட்டணத்தை அவர் இன்னும் செலுத்தவில்லை. இது சட்டபூர்வமான கட்டணமே. இந்தத் தொடர் மோசடியாளருக்கு எதிராக, காசோலை மோசடி வழக்கு ஒன்றையும் நாங்கள் தொடுத்துள்ளோம் என்பது பலருக்குத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக ஷில்பா ஷெட்டி தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!