
எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' என்ற பிரமாண்ட திரைப்படத்தை அடுத்து தமிழில் மீண்டும் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ள சரித்திர திரைப்படம் 'சங்கமித்ரா'.
இந்த திரைப்படத்தில், ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி கூறி இருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தொடங்கவுள்ள பிரான்ஸ் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சங்கமித்ரா' படம் அறிமுகமாகவுள்ளது.
இந்த விழாவில் 'சங்கமித்ரா' குழுவினர்களாகிய இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் முரளி ராமசாமி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் திரையுலகினர்களுக்கும் 'சங்கமித்ரா' படக்குழுவினர் இந்த படத்தைப் பற்றிய அறிமுகம் ஒன்றை அனுப்பியுள்ளார்கள். அதில் 'சங்கமித்ரா' பற்றி படக்குழுவினர் தெரிவித்திருப்பதாவது:
"சங்கமித்ரா 8-ம் நூற்றாண்டில் நடக்கும் கதை. முதன்மை பாத்திரமான சங்கமித்ரா ஈடற்ற அழகி. அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் சோதனைகளும், துயரங்களுமே இந்தக் கதை. பல்வேறு ராஜ்ஜியங்கள், பல்வேறு உறவுகளைப் பற்றிய இந்தக் கதை பிரம்மாண்டமாக சொல்லப்படவுள்ளது.
தமிழ் திரைப்பட மகுடத்தில் ஒரு ரத்தினமாக ஜொலிக்க சங்கமித்ரா முயல்கிறது. தமிழ் என்ற தொன்மையான மொழிக்கு எங்கள் சமர்ப்பணம்.
இது கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும். சங்கமித்ரா இரண்டு பாகங்களாக வெளியாகும்" இவ்வாறு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.