அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா- அந்த நோய் பற்றி தெரியுமா உங்களுக்கு?

By Dinesh TG  |  First Published Nov 1, 2022, 11:15 AM IST

கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூகவலைதளத்தில் தனக்கு மயோசைட்டிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமந்தா பதிவிட்டு இருந்தார். இதுமிகவும் அரியவகை நோய் என்று மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது. இந்நோய் குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
 


தமிழ், தெலுங்கு திரைத்துறைகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தனக்கு மயோசைட்டிஸ் என்கிற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறேன், விரைவில் நலம் பெறுவேன் என நம்புவதாக பதிவிட்டு இருந்தார். மேலும், இந்நோய் பாதிப்பில் இருந்து குணமடைய நான் எதிர்பார்த்ததை விட நீண்ட நாட்களாகும் என தெரிகிறது. இதனால் நான் பாதிக்கப்பட்டிருப்பதை நிச்சயம் மனதளவில் உணர்ந்து ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நான் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்பதை மருத்துவர்கள் நம்புகிறார்கள். என் வாழ்வில் சிறந்த நாட்கள் இருப்பதை போலவே, மோசமான நாட்களும் உள்ளது. நான் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவேன் என்று பதிவில் நடிகை சமந்தா குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் சமந்தாவுகு ஏற்பட்டுள்ள மயோசைட்டிஸ் பாதிப்பு குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம். 

மயோசைட்டிஸ் என்றால் என்ன?

Tap to resize

Latest Videos

எதிர்பாற்றலில் ஏற்படும் குறைபாடு காரணமாகவே மயோசைட்டிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. அடிப்படையில் இது எதிர்ப்பு சக்தி குறைபாடு தான் என்றாலும், இதை தமிழில் தசை அழற்சி நோய் என்று குறிப்பிடலாம். இதனால் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு ஆரம்பத்தில் உடல்களின் பல்வேறு பகுதிகளில் வீக்கம் ஏற்படும். அதையடுத்து ஒட்டுமொத்த செயல்பாடுமே முடங்கிவிடக்கூடிய அபாயம் உள்ளது. ஆரம்பத்தில் கை, கால்கள், இடுப்பு, அடிவயிறு மற்றும் தோள்பட்டைகளை இந்நோய் தாக்கும். அதையடுத்து மூட்டுவலி, மயக்கம், எடை குறைவு, தசைகளில் வலி மற்றும் வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும். இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், மயோசைட்டில் சுவாச மண்டலங்களுக்கும் பரவி மூச்சுவிட முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்நோயின் வகைகள் என்ன?

மொத்தம் மூன்று விதமான மயோசைட்டிஸ் பாதிப்புகள் உள்ளன. சருமத்தில் ஏற்படும் பாதிப்புக்கு டெர்மட்டோ-மயோசைட்டிஸ் என்று பெயார். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களின் மேற்பகுதி, நெற்றி உள்ளிட்ட இடங்களில் அரிப்பு தோன்றும். இதற்கு உரிய முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், உடனடியாக தீர்வு கிடைக்கும். உடற்பகுதிகளில் ஏற்படும் பாதிப்புக்கு இன்குலேஷன் பாடி மயோசைட்டிஸ் என்று பெயர். இது தொடை தசைகள், முன்கை தசைகள் மற்றும் மூட்டுக்கு கீழேவுள்ள தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மூன்றாவது வகை மயோசிடிஸ் மிகவும் அரிதானது. மயோசிடிஸ் என்பது முடக்கு வாதத்தின் இரண்டாம் நிலை விளைவு ஆகும்.

எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது?

சாதாரணமாக இருமல் மற்றும் சளி பாதிப்புகளை ஏற்படுத்தும் வைரஸ் கூட சில வகையான மயோசைட்டிஸ் பாதிப்புகளை விளைவிக்கும். அதேபோன்று சில நுண்ணுயிர் கிருமிகள், இருதய பாதிப்புக்கு சாப்பிடும் மருந்துகள் போன்றவற்றாலும்  மயோசைட்டிஸ் பிரச்னை ஏற்படலாம். உடலின் திறனை விட அதிகமாக மது அருந்துவது மற்றும் போதை மருந்துகள் பயன்பாடு உள்ளிட்ட பழக்கவழக்கத்தாலும் மயோசைட்டிஸ் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

மயோசைட்டிஸ் வராமல் தடுப்பதற்கு வழிகள் உள்ளதா?

மயோசைட்டிஸை தடுக்க எந்த வழியும் கிடையாது. மேலே குறிப்பிட்டுள்ள பாதிப்புகள் வராமல் தவிர்ப்பது சில வழிகளில் பயன் தரலாம். எனினும் இதுவொரு தன்னுடல் தாக்கக் கோளாறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வுகள் கிடைத்தாலும், இதை வராமல் தடுப்பதற்கான உண்மையான காரணங்கள் தெளிவாக கண்டறியப்படவில்லை. தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி பார்க்கையில், இந்த பாதிப்பை வராமல் தடுப்பதற்கான சாத்தியமில்லை. மது மற்றும் கோகோயின் உட்கொள்வதைத் தவிர்ப்பது மட்டுமே ஒருவர் எடுக்கக்கூடிய தடுப்பு நடைமுறைகள் என்று சொல்லலாம்.

இதற்கு சிகிச்சை உண்டா? சிகிச்சை பலன் அளிக்குமா?

பொதுவாக, ஆரம்பநிலையில் இந்நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் ஸ்டெராய்டுகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் சில நாட்களில் நோயாளி குணமடைந்துவிடுவார். அவசரகால சூழ்நிலைகளில், நோயாளிக்கு பெரிய சுவாசப் பிரச்சனைகள், உணவை விழுங்க முடியாத சூழல் போன்றவை ஏற்படக்கூடும். அப்போதும் ஸ்டீராய்டு கொண்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகும் நோயாளி குணமடையவில்லை என்றால் நரம்பு வழியாக நோய் எதிர்ப்பு மருந்து அளிக்கப்படும். இதன்மூலம் மயோசைட்டிஸ் என்கிற தசை அழற்சி பாதிப்பை நிச்சயம் குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 

click me!