கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து மகிழ்வித்த ரோபோ சங்கர்... குவியும் வாழ்த்துக்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Aug 11, 2020, 3:43 PM IST
Highlights

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் சக மனிதர்களை ரிஸ்க் எடுத்து மகிழ்வித்த ரோபோ சங்கருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீயாய் விட வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமை, அவர்களை மதிப்புடனும், மரியாதையுடனும் நடத்த வேண்டுமென அரசு மக்களிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. காரணம் கொரோனா நோயாளிகளைக் கண்டாலே அஞ்சி, வெறுத்து ஒதுக்கும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கி வருகின்றன. 

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க கூட விடாமல் பல இடங்களில் போராட்டங்கள் அரங்கேறியதைம் நாம் கண்டிருக்கிறோம். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை நேரில் சந்தித்து ரோபோ சங்கர் செய்துள்ள காரியம் அனைவரும் பாராட்டும் படி அமைந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் பட்டுக்கோட்டையில் உள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை ஆட்சியரிடம் முறையாக அனுமதி பெற்ற நடிகர் ரோபோ சங்கர், பட்டுக்கோட்டையில் கொரோனா  நோயாளிகள் சிகிச்சை பெறும் இடத்திற்கு நேரில் சென்று, அவர்களோடு சிரித்து பேசியதோடு, பல குரல்களில் பேசியும் மகிழ்வித்துள்ளார். அவர் முறையான தடுப்பு நடவடிக்கைகளுடன் இதை செய்துள்ளார். 

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்தில் சக மனிதர்களை ரிஸ்க் எடுத்து மகிழ்வித்த ரோபோ சங்கருக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. இதனிடையே கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டுமோ தவிர ஒதுக்க கூடாது என்றும், அவர்களோடு அன்புடன் பழகி தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் இடங்களுக்கு சென்று தனது சொந்த செலவில் அவர்களை மகிழ்விக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

click me!