பாலிவுட் நடிகர் ரன்தீப் ஹூடா, சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நாயகனாக நடித்துள்ளதோடு, அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறி உள்ளார்.
பாலிவுட் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் ரன்தீப் ஹூடா. அவர் நடிப்பில் தற்போது வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இதன்மூலம் இயக்குனராகவும் பாலிவுட்டில் கால் பதிக்கிறார் ரன்தீப் ஹூடா.
சாவர்க்கர் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் மே 28-ம் தேதி வீர் சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதில் ரன்தீப் ஹூடாவின் தோற்றத்தை பார்த்து அனைவரும் ஷாக் ஆகிப்போயினர். அந்த அளவுக்கு மிகவும் மெலிந்த தோற்றத்திற்கு மாறி இருந்தார். அவர் இப்படத்தில் நடித்த நான்கு மாதங்களும் ஒரு துளி கூட உடல் எடை மாறாமல் பார்த்துக்கொண்டார். ரன்தீப் அதை எப்படி செய்தார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அதற்கு பதில் அளித்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
அதன்படி தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் கூறுகையில், ரன்தீப் இப்படத்திற்காக 26 கிலோ வரையில் உடல் எடையை குறைத்துள்ளாராம். இப்படம் தொடங்கும் முன்னர் 86 கிலோ உடல் எடையுடன் இருந்த ரன்தீப் ஹூடா, பின்னர் 60 கிலோவாக எடையை குறைத்தாராம். உடல் எடையில் மாற்றம் ஏற்படாமல் பராமரிக்க நான்கு மாதங்களுக்கு ஒரு பேரீச்சம்பழம் மற்றும் ஒரு கிளாஸ் பால் மட்டும் அவர் குடித்து வந்ததாக ஆனந்த் பண்டிட் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... எப்புட்ரா... அட்டர் பிளாப் ஆன சமந்தாவின் சாகுந்தலம் படத்துக்கு கேன்ஸ் பட விழாவில் கிடைத்த மிக உயரிய விருது
வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இத்திரைப்படம் 2023ம் ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ரன்தீப் ஹூடா, நமக்கு சுதந்திரம் கிடைக்க பல ஹீரோக்கள் காரணமாக உள்ளனர். ஆனால் அவை அனைத்தும் அவ்வளவு பிரபலமாக இல்லை. ஆனால் சாவர்க்கரைப் பற்றி நிறைய தவறான விவாதங்கள் உள்ளன. அவர்களைப் பற்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும். அவர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.
சாவர்க்கர் ஒரு புரட்சிகரமான சுதந்திரப் போராட்ட வீரர். இந்து தேசியவாத, அரசியல் கோட்பாட்டின் முதன்மையான முன்னோடிகளில் ஒருவராக அவர் கருதப்படுகிறார். இந்தியா ஹவுஸ் என்ற புரட்சிகரக் குழுவுடன் தொடர்பு கொண்டதற்காக 1910 இல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அந்தமான் நிக்கோபார் தீவு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ரத்தினகிரிக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்... கே.ஜி.எஃப்-ல் ராக்கி பாய் ஆக மாஸ் காட்டிய யாஷ்... களவாணி படத்துல நடிச்சிருக்காரா? இவ்ளோ நாள் இதுதெரியாம போச்சே