
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிச.31ஆம் தேதி அறிவித்தார். அப்போது பேசிய அவர் தனது அரசியல் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, மன்ற உறுப்பினர்களை ஒன்று சேர்க்கும் விதமாக ரஜினி ரசிகர் மன்றம் என்ற இணையதளத்தை உருவாக்கினார். அது சமீபத்தில் ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், மதுரை தலைமை நற்பணி மன்றம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு பாராட்டு விழா, ரஜினி 68வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற முப்பெரும் விழாக்கள், மதுரை அழகர் கோவிலில் நேற்று நடைபெற்றது .
அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்களுக்கு சுவையான கறி விருந்து வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளரும், நடிகர் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்றத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களுக்கு தையல் மெஷின், வேட்டி சேலை, சில்வர் பானைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்கள் போன்றவை வழங்கப்பட்டன.
அப்போது செய்தியாளர்களிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது... நான் 12 வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்கிற நோக்கில் ரஜினி அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளார். அவரது ஆன்மீக அரசியல் என்பது தனிப்பட்ட மதத்தை முன்னிலைப்படுத்துவது அல்ல. அனைத்து சாதி மதத்தை ஒருங்கிணைப்பதுதான் ஆன்மீக அரசியல். சிலர் அதை தவறாகப் புரிந்துகொண்டு விமர்சிக்கின்றனர்.
மதுரை ராசியான மண். எனவே இங்கு ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என கருதுகிறோம். இதற்காக மதுரையில் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கட்சியின் பெயர்,சின்னம் மற்றும் கொடி ஆகியவை தொடங்கப்பட உள்ளது. இந்த மாநாடு விரைவில் நடைபெறும். கட்சியின் கொள்கைகள் குறித்த அறிவிப்பும் இந்த மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை எம்.எல்.ஏவாக வேண்டும் என்கிற ஆசை ஏதுமில்லை. நான் கடைசி வரை ரஜினியின் காவலனாக இருக்க ஆசைப்படுகிறேன் என்றார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.