நடிகர் அல்லு அர்ஜுன் 'புஷ்பா 2 'படத்தின், பிரீமியர் ஷோ ஒளிபரப்பப்பட்ட போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்கிற பெண் உயிரிழந்த நிலையில், அவருடைய 8 வயது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது, சிறப்பு காட்சிகள் மற்றும் பிரீமியர் காட்சிகள் திரையரங்கில் ஒளிபரப்பப்படுவது வழக்கமான ஒன்றே. தமிழகத்தில் கடந்த மூன்று வருடங்களாக பிரீமியர் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதோடு, சிறப்பு காட்சிகளும் 9:00 மணிக்கு மேல் தான் துவங்கும் என்கிற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறை பின்பற்றப்பட்ட பின்னரே ரசிகர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, போன்ற பகுதிகளில் பிரீமியர் ஷோ மற்றும் சிறப்பு காட்சிகள் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது ஒளிபரப்படுகின்றன. அந்த வகையில் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி ரிலீசான புஷ்பா 2 படத்தின் பிரீமியர் காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் போடப்பட்டது.
முன்னறிவிப்பின்றி, அல்லு அர்ஜுன் இந்த திரையரங்கிற்கு திடீரென விசிட் அடித்ததால், அல்லு அர்ஜுனை நேரில் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரையரங்கத்தின் முன்பு திரண்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினை கலைத்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய 35 வயது பெண் ரேவதி மற்றும் அவருடைய 8 வயது மகன் கூட்டத்தால் நசுக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே ரேவதி உயிரிழந்த நிலையில், அவருடைய 8 வயது மகனுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த தகவல் குறித்து அறிந்த அல்லு அர்ஜுன் உடனடியாக வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆறுதலை அந்த குடும்பத்தினருக்கு தெரிவித்தார். 25 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அறிவித்தார்.
ரேவதியின் கணவர் அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர்கள், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறினார். இந்த வழக்கு தொடர்பாக டிசம்பர் 13 ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அவருக்கு நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என அல்லு அர்ஜுன் தரப்பு உயர் நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து அவருக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
எனினும் கீழ் மன்றத்தில் கீழ் நீதி மன்ற தீப்பின் படியும், உயர்நீதி மன்ற சான்றிதழ்கள் காவலர்களுக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அல்லு அர்ஜுன் ஒரு நாள் இரவு சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அல்லு அர்ஜுன் ரிலீஸ் ஆனதும் ஏராளமான பிரபலங்கள் அவரை வந்து சந்தித்தது அனைவரும் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
மேலும் மருத்துவமனையில் இருக்கும் சிறுவனை பற்றியும் பேட்டி ஒன்றில் பேசிய அல்லு அர்ஜூன் தற்போதைய சூழலில் அந்த சிறுவனை பார்க்க முடியவில்லை என்றாலும், அந்த 8 வயது சிறுவன் நலமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திருந்தார். எப்போதும் ரேவதியின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க விரும்புவதாக உருக்கமாக பேசினார் அல்லு அர்ஜுன்.
தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதியின் 8 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும், அவருடைய உடல் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் புஷ்பா 2 பட குழுவினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது மட்டும் இன்றி, மீண்டும் புகார் கொடுக்கும் பச்சத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.