மறைந்தும் மக்களின் மனங்களில் வாழும் புனீத் ராஜ்குமார்... கடைசி ஆசையை நிறைவேற்ற குடும்பத்தினர் எடுத்த முடிவு.!

By Asianet TamilFirst Published Jan 10, 2022, 10:04 PM IST
Highlights

அந்த வீட்டுக்கு வந்த புனீத் ராஜ்குமார், அந்த வீட்டை ஆசை ஆசையாகச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அந்த இடத்தில் ராஜ்குமாருக்கு நினைவு இல்லம் கட்டவும், ராஜ்குமார் பற்றிய அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கவும் புனீத் திட்டமிட்டிருக்கிறார். 

மறைந்த கன்னட முன்னணி நடிகரான புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பணிகளை அவருடைய குடும்பத்தினர் கையில் எடுத்துள்ளனர்.

கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட முன்னணி நடிகரான புனீத் ராஜ்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 29 அன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாமல், கர்நாடக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 46 வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தை யாராலும் ஜீரணிக்க முடியாமல் போனது. பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே புனீத் ராஜ்குமாரின் உடலும் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

புனீத் ராஜ்குமார் உயிருடன் இருந்தபோது அவர் ஏழை, எளிய மக்களுக்கு செய்த உதவிகள், ஏழைக் குழந்தைகளின் கல்விகாக செய்த செலவு என அவரைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியானதால், அவர் மீது மரியாதையும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. பெங்களூரிவில் உள்ள அவருடைய நினைவிடத்தைக் காண அவருடைய ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் நாள்தோறும் வந்து பார்வையிட்டு மரியாதை செய்து வருகின்றனர். அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பணியில் அவருடைய குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புனீத் ராஜ்குமார் மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய பூர்வீக ஊரான கஜனூருக்கு வந்திருக்கிறார். அங்கு  தந்தை ராஜ்குமாருக்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டுக்கு வந்த புனீத் ராஜ்குமார், அந்த வீட்டை ஆசை ஆசையாகச் சுற்றிப் பார்த்திருக்கிறார். அந்த இடத்தில் ராஜ்குமாருக்கு நினைவு இல்லம் கட்டவும், ராஜ்குமார் பற்றிய அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கவும் புனீத் திட்டமிட்டிருக்கிறார்.

 

மேலும் அந்த பழைய வீட்டின் பழமையை மாற்றாமல் புதிய கட்டுமானத்தை உருவாக்கி அங்குக் கல்வி பணிகளை நடத்தவும் புனீத் ராஜ்குமார் ஆசைப்பட்டிருக்கிறார். இதையெல்லாம் அங்குள்ளவர்களிடம் பேசிவிட்டுதான் புனீத் ராஜ்குமார் ஊர் திரும்பியிருக்கிறார். ஆனால், அடுத்த சில நாட்களுக்குள் புனீத் ராஜ்குமார் மறைந்து போனர். இந்த விஷயம் அவருடைய குடும்பத்தினருக்கு தெரிய வர, தற்போது புனீத் ராஜ்குமாரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அந்தப் பணிகளை அவருடைய குடும்பத்தினர் கையில் எடுத்துள்ளனர். அவரது சகோதர்கள் சிவராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் புனீத்தின் விருப்பப்படி தந்தை வீட்டை மாற்றியமைக்கும் பணியை செய்து வருகிறார்கள். வீட்டைப் புதுப்பிக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.

click me!