பீட்ஸா படத்தில் இயக்குநாக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தார். அடுத்த படமான ஜிகர்தண்டாவை இயக்கி தேசிய அளவில் கவனம் பெற்றார். வித்தியாசமான களங்களில் பயணித்த கார்த்திக் சுப்புராஜ், ரஜினிக்காக இறங்கி வந்து ’பேட்ட’யில் தன்னிலை மறந்து மாஸ் காட்டுவதற்கு மட்டுமே மல்லுக்கட்டியிருக்கிறார்.
பீட்ஸா படத்தில் இயக்குநாக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவையே திரும்பிப்பார்க்க வைத்தார். அடுத்த படமான ஜிகர்தண்டாவை இயக்கி தேசிய அளவில் கவனம் பெற்றார். வித்தியாசமான களங்களில் பயணித்த கார்த்திக் சுப்புராஜ், ரஜினிக்காக இறங்கி வந்து ’பேட்ட’யில் தன்னிலை மறந்து மாஸ் காட்டுவதற்கு மட்டுமே மல்லுக்கட்டியிருக்கிறார்.
மலைப்பிரதேசத்தில் ஆரம்பமாகும் கதை, பிளாஷ்பேக்கில் மதுரைக்கு நகர்ந்து, க்ளைமேக்ஸ் உத்தரப்பிரதேசத்தில் முடிகிறது. மதுரையில் வசிக்கும் இஸ்லாமியரான சசிகுமாரின் குடும்பத்தின் அரவணைப்பில் வளர்கிறார் அனாதையான ரஜினி. ரஜினிக்கு நண்பனாகவும், தம்பியாகவும் இருக்கும் சசிகுமார் மாற்றுமதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால், உக்கிரமான மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஆணவக் கொலைவெறித் தாக்குதலில் ரஜினியின் முதல் மனைவியாக வரும் த்ரிஷா, சசிகுமார் ஆகிய இருவரும் பரிதாபமாய் பலியாகிறார்கள். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கர்ப்பிணியான சசிகுமாரின் மனைவியை காப்பாற்றி விடுகிறார் ரஜினி.
ஆணவக்கொலையை நடத்திய இரு சகோதரர்களில் ஒருவரை கொன்றுவிடும் ரஜினி, மற்றவரை காலை உடைத்து வடநாட்டுக்கு ஓட விடுகிறார். அவர்தான் முக்கிய வில்லனாக உருவெடுக்கும் நவாஸுதீன் சித்திக். ஆன்மீகத்தில் அதீத நாட்டம் கொண்டவராக அறியப்படும் ரஜினி இந்தப்படத்தில் இந்து வெறி தாக்குதலை சராமரியாக எதிர்த்து இருக்கும் காட்சிகளை அமைக்க எப்படி ஒப்புக்கொண்டாரோ? அது பாபாவுக்கே வெளிச்சம். 20 ஆண்டு பகையை முடிக்கத் துடிக்கிறது நவாஸுதீன் தரப்பு.
வடமாநிலத்தில் ஹாஸ்டல் வார்டனாக இருக்கிறார் ரஜினி. அங்கு ஒருமாணவனை கொல்லத் திட்டம் போடுகிறது வில்லன் தரப்பு. நவாஸுதீன் சித்திக்கின் மகன் கேரக்டரில் மற்றொரு வில்லனாக வருகிறார் விஜய் சேதுபதி. அவரை வைத்து அந்த மாணவனை பலி வாங்க துடிக்கிறார்கள். அதை அறிந்த ரஜினி, விஜய்சேதுபதியை ராமயணக் கதை சொல்லி சின்ன ட்விஸ்ட் வைத்து தன் வசப்படுத்துகிறார். ரஜினியின் வார்த்தைகளை நம்பும் விஜய் சேதுபதியை வைத்தே அவரது அப்பாவான நவாஸூதீனின் டீமையே காலி செய்து விடுகிறார்கள். பிறகு விஜய் சேதுபதியிடம் நடந்த ப்ளாஷ்பேக்கை சொல்கிறார் ரஜினி. கொல்ல திட்டமிட்டு இருந்த கல்லூரி மாணவர் சசிகுமாரின் மகன் என்கிற சஸ்பென்ஸ் உடைபடுகிறது. இந்த ப்ளாஷ்பேக்கை ஏற்றுக்கொண்டு விஜய்சேதுபதி ரஜினியை பலி வாங்குகிறாரா? என்பது தான் க்ளைமாக்ஸ். ஆரம்பத்தில் நெகட்டிவ் கேரக்டரில் தோன்றும் பாபி சிம்ஹா, பிறகு ரஜினி வழிக்கு திரும்புகிறார்.
வார்டனாக இருக்கும் ரஜினிக்கும் மருத்துவராக இருக்கும் சிம்ரனுக்கும் காதல் மலர்கிறது. சசிகுமார் மகன் காதலிக்கும் பெண்ணின் அம்மாதான் இந்த சிம்ரன். அவரது மகள் ரஜினியை அங்கிள் என அழைப்பார். ‘’ அங்கிள்னு கூப்பிடக்கூடாது’’ என செல்லமாக போபப்படுதன் மூலமும், சசிகுமார் மகன் ரஜினியிடம் பேசும்போது ‘யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க எனக் கேட்கும்போது ’உங்க மாமியார்கிட்ட’ என சொல்லும் டயலாக்குகள் மூலம் ரஜினி, சிம்ரன் மீதான காதலை வெளிப்படுத்துகிறார்.
திருநாவுக்கரசுவின் கேமரா பேட்டயை குவாலிட்டியான கலர்புல்லான படமாக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இளமையான ரஜினியை அவரது ஒளிப்பதிவு காப்பாறினாலும் ஆங்காங்கே ரஜினியின் முதிர்ச்சி வெளிப்பட்டுவிடுதவதை தவிர்க்க முடியவில்லை. இளமையான தோற்றத்தில் தோன்றுவதை இந்தப்படத்தோடு நிறுத்திக் கொண்டால் ரஜினிக்கு நல்லது. ரஜினியின் டான்ஸ் மூவ்மெண்டுகள் சகிக்கமுடியவில்லை. பேட்ட படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமே ரசிப்பார்கள். பொதுவான ரசிகர்கள் விரும்புவார்களா? சந்தேகம்தான்.
சிம்ரன்- திரிஷா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் த்ரிஷாவுக்கான காட்சிகள் குறைவு. ரஜினிக்கு ஜோடியாக நடித்து விட்டேன் என இருவரும் ஒப்புக்கு சொல்லிக்கொள்ளலாம். விஜய், அஜித் படங்களில் நடித்ததைப்போலவே சிம்ரன் இன்னும் சிக்கென்று இளமையாக காட்டப்பட்டிருக்கிறார். நவாஸூதீன் சித்திக், சசிகுமார், பாபிசிம்ஹா, விஜய்சேதுபதி ஆகியோர் கொடுத்த பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இரைச்சல் இசை மன்னன் அனிருத் இந்தப்படத்தின் பின்னணி இசையில் பெருங்கூச்சல் போட்டு காதுகளை பதம் பார்த்திருக்கிறார். பின்னணி இசை படத்தோடு ஒட்டவில்லை. பக்கத்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் வேறொரு படத்தின் இசையை போல ஒட்டமறுக்கிறது. மரணமாஸ் பாடல் ’ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...’ பாடலின் உல்டாவாக இருக்கிறது. வழக்கம்போலவே இளையராஜா பாடலில் இருந்து மற்றவர்கள் உருவியதைப்போல சில பாடல்களை உருவியிருக்கிறார் அனிருத்.
படத்தின் நீளம் இரண்டு மணி நேரம் 11 நிமிடம். இறுதி அரைமணி நேரத்தில் அலுப்புத் தட்டி விடுகிறது. இறுதிக் காட்சிகளில் அவ்வப்போது ரஜினி விஜய் சேதுபதியிடம் முடிச்சிடலாமா? எனக் கேட்பார். தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் ’முடிச்சிடலாம்.. முடிச்சிடலாம்.. படத்தை முடிச்சிடலாம்..’ என முணங்குவது காதில் விழுகிறது. படக்காட்சிகளை அரை மணிநேரம் வெட்டினால் ரசிகர்களில்ன் அயர்சியை குறைக்கலாம். பேட்ட படம் அரை மணி நேரம் குறைக்கப்பட்டதாக இன்னும் சில நாட்களில் செய்திகள் வெளியாகப்போவது உறுதி!