விமர்சனம் காற்றின் மொழி... கொஞ்சம் கருணை காட்டுங்க ஜோதிகாக்கா!

By vinoth kumar  |  First Published Nov 16, 2018, 1:13 PM IST

இந்தியில் சுரேஷ் திரிவேணியின் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த இதே நவம்பரில் ஒருநாள் தள்ளி அதாவது நவம்பர் 17 அன்று ரிலீஸான தும்ஹாரி சுலுவின் ரீமேக்தான் இந்த ‘காற்றின் மொழி’.பேசாமல் ஜோதிகாவின் முழி என்று டைட்டில் வைத்திருந்தால் இன்னும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும் என்பது படம் பார்த்தவர்களுக்கு விளங்கும்.


மசாலா சமாச்சாரங்களை அதிகம் திணிக்காத, சாராயக்கடைகளில் குத்துப்பாட்டு வைக்காத, மலிவான கதைகளைப் படமாக்காத போன்ற சில காரணங்களுக்காக ராதாமோகன் தற்போதைய தமிழ்சினிமாவின் டாப்டென் இயக்குநர்களில் ஒருவராக இருந்துகொண்டே இருக்கிறார். ஆனால் ’60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ரீமேக் இந்த ‘காற்றின் மொழி’ என்கிறபோது ஒரு இயக்குநராக தனது சுயத்தை இழந்துகொண்டிருக்கிறாரோ என்று தோணவே செய்கிறது. 

இந்தியில் சுரேஷ் திரிவேணியின் இயக்கத்தில் வித்யா பாலன் நடிப்பில் கடந்த இதே நவம்பரில் ஒருநாள் தள்ளி அதாவது நவம்பர் 17 அன்று ரிலீஸான தும்ஹாரி சுலுவின் ரீமேக்தான் இந்த ‘காற்றின் மொழி’.பேசாமல் ஜோதிகாவின் முழி என்று டைட்டில் வைத்திருந்தால் இன்னும் கச்சிதமாகப் பொருந்தியிருக்கும் என்பது படம் பார்த்தவர்களுக்கு விளங்கும்.  

Tap to resize

Latest Videos

படு பயங்கர ஆடம்பரமான அபார்ட்மெண்ட்ஸில் வசிக்கும் நடுத்தரக் குடும்பம் ஜோதிகாவுடையது. ஒரு டெய்லரிங் கம்பெனியில் வேலை பார்க்கும் கணவர் விதார்த். 11 வயது பையன் கொண்ட குடும்பம். கணவன், மகனுக்குப் பணிவிடை செய்ததுபோக பெண்புறா ஒன்றுடன் பேசிப்பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கும் ஜோதிகாவுக்கு திடீரென ஒரு எஃப்.எம். ரேடியோவில் ஆர்.ஜே. வேலை கிடைக்கிறது. விஜயலட்சுமி என்ற பெயரை மதுவாக மாற்றி ராத்திரி நேரத்து ரசிகர்களுக்கு அந்தரங்க ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி. 

 அந்த வேலையை ஜோதிகா ரசித்துச் செய்தாலும் கணவருக்கு, ஜோவின் அப்பா, அக்காக்களுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. குடும்பத்தில் சின்னதாக ஒரு கஜா புயலடிக்க, பின்னர் அதிலிருந்து எப்படி மீண்டு எப்படி கரைக்கு வந்தார்கள் என்பதே கதை. பொதுவாக ரீமேக் படங்களை ஒரிஜினல் படங்களுடன் ஒப்பிடுவது ஒருவகை அராஜகம். அதுவும் வித்யாபாலனுடன் ஜோதிகாவை ஒப்பிட்டால் மாமனார் சிவக்குமார் தேடிவந்து நம் செல்போனை வாங்கி உடைப்பார். ஆனாலும் சொல்லியே ஆகவேண்டும். ஒரு சில காட்சிகள் தவிர்த்து ஓவர் ஆக்டிங்கில் ஜோதிகாக்காவை சகிக்க முடியவில்லை. ‘அக்கா கொஞ்சம் கருணை காட்டுங்க என்று கதறி அழவேண்டும் போல இருக்கிறது.

ஜோதிகாவின் குட்டித்தம்பி போல இருக்கும் விதார்த் கேரக்டரைத் தாண்டியும் பரிதாபம் சம்பாதிக்கிறார். படுக்கையில் ‘நேத்து ராத்திரி அம்மா’ பாடுகிற அளவுக்கு நெருக்கம் என்று காட்டியிருந்தாலும் ஜோடிப்பொருத்தத்துக்கான ஒரு அம்சம் கூட பொருந்தி வரவில்லை. எஃப்.எம்.மின் அட்மினாக வரும் லட்சுமி மஞ்சு அல்டிமேட் சாய்ஸ். மற்றும் ராதாமோகனின் கம்பெனி ஆர்டிஸ்டுகளான குமரவேல், எம்.எஸ். ஸ்கர்,மயில்சாமி ஆகியோர் வழக்கம்போல் முத்திரை பதிக்கிறார்கள். 

ஒரே ஒரு காட்சியில் சிலம்பரசனாகவே எட்டிப்பார்க்கும் சிம்பு ‘லேட்டா வந்ததுக்காக என்கிட்ட மன்னிப்புக் கேட்ட ஒரே ஜீவன் நீங்கதாங்க’என்று ஜோதிகாவிடம் ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்து அப்ளாஸ் அள்ளுகிறார்.ஜோதியக்காவின் ட்வின் அக்காக்கள் வரும் காட்சிகளெல்லாம் வாணிமகாலில் கிரேஸி மோகன் நாடகக் காட்சிகள் போலவே அவ்வளவு செயற்கையாக இருக்கின்றன. ஒரு தகவலுக்காக இசை ஏ.ஹெச்.காஷிஃப், ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, வசனம் பொன் பார்த்திபன். இப்படத்தின் ஒரிஜினலைப் பார்க்காமல் இருந்திருந்தால் இயக்குநர் ராதாமோகனை வாழ்த்தி வரவேற்றிருக்கலாம்.

click me!