பருத்திவீரன் பிரச்சனையில் நான் பெற விரும்புவது யாசகமல்ல... என் உரிமை! இயக்குனர் அமீர் காட்டம்

By Ganesh A  |  First Published Dec 9, 2023, 2:36 PM IST

பருத்திவீரன் பட பிரச்சனை தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அமீர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.


அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பட்டுள்ளதாவது : “சென்னையைச் சூழ்ந்துள்ள மழை வெள்ளத்தால் பொதுமக்கள் சொல்லொணா துயரத்துக்கு ஆளாகி, முடங்கிப்போயுள்ள இந்த நேரத்தில், அதனுடைய தாக்கத்தில் இருந்து மீளமுடியாமலும், அந்த இழப்புகளுக்கு ஈடு செய்ய முடியாமலும், மீண்டும் தங்களது வாழ்க்கையச் சரி செய்யப் போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில்.. எனது “பருத்திவீரன்” தொடர்பான இதுபோன்ற ஒரு கடிதத்தை வெளியிடுவதில் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். 

ஆனால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டில் நடந்த உண்மைகளைச் சொல்ல தேவை ஏற்பட்டிருக்கிற இன்றைய சூழலில், திரு.சிவசக்தி பாண்டியன் அவர்களுடைய நேர்காணலுக்குப் பதில் சொல்லாமல் நான் கடந்து விட்டால், நானே உண்மைகளை மறைப்பதாக ஆகிவிடும். எனவே, திரு.சிவசக்தி பாண்டியனாகிய உங்களுக்கும், “பருத்திவீரன்” படம் சம்பந்தமான பிரச்னையில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், ஊடகத் துறையினருக்கும் உண்மை நிலையைத் தெரிவிக்க மட்டுமே இந்தக் கடிதம்.! இதில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

Tap to resize

Latest Videos

சமீபத்தில், ஒரு காட்சி ஊடகத்தில், ”பருத்திவீரன்” திரைப்படம் தொடர்பாக தாங்கள் பேசியிருந்த இரண்டு நேர்காணல் பகுதிகளை இன்றைக்கு நான் பார்த்தேன். ”பருத்திவீரன்” திரைப்பட வெளியீடு தொடர்பான பிரச்னையில் தாங்கள் தலைமையேற்றிருந்தீர்கள் என்ற உண்மையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாங்களே பொதுவெளியில் ஒப்புக்கொண்டதை நான் மனதார வரவேற்கிறேன். மேலும், அந்த நேர்காணலில் என் மீதும், என் தொழிலின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், நம்பிக்கைக்கும், பாராட்டுதலுக்கும் நான் உளமார நன்றி கூறுகிறேன். சக திரையுலகினர் அனைவரையும் அன்போடு அரவணைக்கும் தங்களது பாங்கு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே தான், தங்களது நேர்காணல் முற்றிலும் “எல்லோரும் நல்லவரே..” என்கிற பாணியில் அமைந்திருந்தது என்பதை உணர்கிறேன்.

தங்களின் நேர்காணலில் தாங்கள் பேசியிருந்த விசயங்களில் உள்ள முரண்பாடுகளை அல்லது தாங்கள் சொல்ல மறந்த உண்மைகளை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன். நிறைய விசயங்களை தாங்கள் சொல்லியிருந்தாலும், சில விசயங்களை தாங்கள் மற்ந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்தக் கடிதத்தை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். திரைப்படங்களில் விவகாரம் இருக்கும் பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தால், சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைக்கப்படும் என்று சங்க நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

அந்த வகையில், தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற “TEAMWORK PRODUCTION HOUSE” என்ற என்னுடைய நிறுவனத்தின் சார்பில் சென்சார் செய்யப்பட்ட “பருத்திவீரன்” திரைப்படத்தை இன்னொருவர் பெயருக்கு மாற்றிக் கொடுக்கக் கூடிய சூழ்நிலை தங்களுக்கு உருவானதா? அல்லது உருவாக்கப்பட்டதா.? என்பதை தாங்கள் அந்த நேர்காணலில் தெளிவாக விளக்கவில்லை. எனது, “TEAMWORK PRODUCTION HOUSE” நிறுவனத்தின் பெயரில் தணிக்கை செய்யப்பட்ட “பருத்திவீரன்“ திரைப்படத்தை ”அரசியல் அழுத்தம்” காரணமாகவே திரு.ஞானவேல் அவர்களுக்கு தாங்கள் மாற்றிக் கொடுக்கக்கூடிய சூழல் தங்களுக்கு உருவானது என்பதை அன்றைய காலகட்டத்தில் என்னிடம் எடுத்துரைத்தீர்கள். 

தாங்கள் சொல்வது உண்மையா.! பொய்யா.! என்பதை அறிய முடியாத சூழலே அன்றைக்கு எனக்கு இருந்தது. இருந்த போதும், வேறுவழியின்றி சங்க நிர்வாகிகள் சொன்னதை உண்மையென்று நம்பியே, எனது ”பருத்திவீரன்” திரைப்படத்தை நான் வேறொரு நிறுவனத்துக்கு உரிமை மாற்றம் செய்ய ஒப்புதல் அளித்தேன். பிறிதொரு முறை திரைப்பட வெளியீட்டுக்குப் பின்னர், அன்றைய முதல்வர் அவர்களை, அவரது இல்லத்திலேயே சந்தித்து நடந்த விபரங்களை நான் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, ”தனக்கும் இந்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை..” என்று அவர் கூறிய பின்பு தான் நான் முழுவதுமாக திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்தேன் என்பதை இப்போது தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், “பருத்திவீரன் திரைப்படம் தொடர்பாக அமீர் நீதிமன்றத்தை நாடியிருப்பது தேவையற்றது.. ஒரே குடும்பமாக இருக்க வேண்டிய நாம், தயாரிப்பாளர் சங்கத்திலேயே பேசித் தீர்த்திருக்கலாம்..” என்றும் அந்த நேர்காணலில் தாங்கள் கூறியிருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் 2006-2008 காலகட்டத்தில் செயலாளராக இருந்த திரு.சிவசக்தி பாண்டியன் ஆகிய தங்களுக்கு மீண்டும் ஒரு விசயத்தை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன். 

தங்கள் முன்னிலையிலும், அன்றைய காலகட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் கையெழுத்துடனும் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை, Studio Green நிறுவனம் மீறிவிட்டது என்றும், தங்களால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்றும், திரு.சிவகுமார் அவர்கள் எங்களது அழைப்பையே ஏற்க மறுக்கிறார் என்றும் திரு.ஞானவேல் எங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறார் என்றும் தாங்களும், தயாரிப்பாளர் சங்கத்தின் அப்போதைய தலைவர் மறைந்த திரு.ராம.நாராயணன் அவர்களும் என்னிடம் பலமுறை சொன்னதை நீங்கள் தற்போது மறந்து விட்டீர்கள் போலும்.!

”பருத்திவீரன்” திரைப்படம் வெளியான பின்பு, ”தங்கள் முன்னிலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொடுங்கள்..” என்று நான் தினமும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு அலைந்து திரிந்தது தங்களுக்கு நினைவில் இல்லையா.? ”எளியவனை வலியவன் அழுத்திக் கொல்வான்..” என்பதும் “நல்லான் வகுத்ததா நீதி.? இங்கே வல்லான் வகுத்ததே நீதி..” என்பதையும் தயாரிப்பாளர் சங்கம் எனக்கு எடுத்துரைத்ததன் காரணமாகவும், தங்களின் மீதும், தயாரிப்பாளர் சங்கத்தின் மீதும் நான் வைத்திருந்த நம்பிக்கை பொய்யான பின்பும் தான், நான் நீதிமன்றத்தை நோக்கித் தள்ளப்பட்டேன் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஒரு கட்டத்தில் நெறியாளர் அவர்கள், “அமீர் அவர்களுக்கு 80 லட்சம் கொடுக்க வேண்டும் என சங்கத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டதா.?” என்ற கேள்வியை முன்வைக்க, தாங்கள் அதை உறுதி செய்யாமலேயே கடந்து சென்றது ஏன்.? என்று எனக்குப் புரியவில்லை.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

”அமீருக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு என்பது உறுதி செய்யப்படவில்லை..” என்று தாங்கள் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறீர்கள். இதே கருத்தே, நீதிமன்றத்திலும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள Affidavit-டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் இப்போது தங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். மேலும், இப்பிரச்னை தொடர்பாக நான் நீதிமன்றம் சென்ற பிறகு தயாரிப்பாளர் சங்கத்தை அணுகவே இல்லை என்றும் கூறியிருக்கிறீர்கள். ஒவ்வொரு முறை தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகம் மாறும் போதும், நான் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி எனது கோரிக்கையை எழுப்புவது வாடிக்கையான ஒன்று தான். 

அந்த வகையில், சங்கத்தின் தேர்தல் நேரங்களில் தங்களை இரண்டு முறை நான் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போது, “உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை குறித்த தீர்மான நகலைத் தருகிறேன்..” என்று தாங்கள் வாக்களித்ததையும் தங்களுக்கு நினைவு கூறுகிறேன். மேலும், அந்த தீர்மான நகலைப் பெறுவதற்காக நான் நீதிமன்றத்தின் மூலமாகவும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன் என்பதும் தாங்கள் அறிந்ததே.! ”இன்று வரை அந்த தீர்மான நகல் எனக்கு அளிக்கப்படவேயில்லை..” என்பதும் மறுக்க முடியாத உண்மை.

மேலும், தாங்கள் “கணக்கு வழக்கை இப்போது எடுத்துக் கொண்டு வாருங்கள்.. அதை வைத்து சரி பார்க்கலாம்..” என்று நேர்காணலில் ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். 17 வருடங்களுக்கு முன்பாகவே கணக்கு வழக்குகள் அனைத்தும் தயாரிப்பாளர் திரு.கஃபார் அவர்கள் மூலமாக சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதை திரு.ஞானவேல் அவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் கொடுத்து விட்டது என்பதை மறந்து விட்டீர்கள் போலும்.! ஒரு கட்டத்தில், ஏதோ.! ஒரு சட்டப்பிரிவின் படி, “பருத்திவீரன்” திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் தணிக்கைச் சான்றிதழில் மாற்றப்பட்டதாக தாங்கள் போகிற போக்கில் அந்த நேர்காணலில் சொல்லியிருக்கிறீர்கள். 

ஆனால், ”தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் தணிக்கைச் சான்றிதழ் பெறவே முடியாது.!” என்பது பல ஆண்டுகளாக நிர்வாகத்தில் இருந்த தங்களுக்கு தெரியாமல் போனது எனக்கு ஆச்சர்யமே.! “பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு திரு.சூர்யா அவர்களும், திரு.கார்த்தி அவர்களும் எனக்குத் தேதி தருவதாகச் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் என்னைப் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், அவர்களை வைத்துப் படம் தயாரித்து நான் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்று திரு.சிவகுமார் அவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவலை கூறியிருக்கிறீர்கள். ”பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டுக்குப் பின்பு, அப்படி எந்த நிகழ்வும் இன்று வரை நடைபெறவில்லை. யாரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை, யாரும் என்னைச் சந்திக்கவும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

நான் திரைத்துறைக்கு வந்த காலம் தொட்டே, பிரபல நடிகர்களைச் சந்தித்து, அவர்களிடம் தேதி வாங்கி, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு என்றைக்குமே ஏற்பட்டது இல்லை. இதை பல நேர்காணல்களில் நான் கூறியிருக்கிறேன் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 
மேலும், திரு.ஞானவேல்ராஜா அவர்களே பல நேர்காணல்களில் “பருத்திவீரன்” திரைப்படத்துக்கு 4 கோடியே 85 லட்ச ரூபாய் செலவிட்டதாக கூறியுள்ள போது, தாங்கள் 6 கோடி ரூபாய் செலவானதாக தவறான தகவலை அளித்துள்ளீர்கள். மிக முக்கியமாக, “Team Work Production House” என்ற நிறுவனத்தின் பெயரில் இருந்த எனது “பருத்திவீரன்” திரைப்படத்தை,”Studio Green” நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்,

யார்? யாருக்கு? எந்தெந்த? ஏரியாக்கள் வினியோக உரிமையாக கொடுக்கப்பட்டன என்ற விபரத்தையும், அன்றைக்கு நடந்த பேச்சுவார்தையின் போது யார்? யார்? உடனிருந்தார்கள்  என்பதையும்,  அவர்களில் யார்? யார்? என்னென்ன பேசினார்கள்.? என்பதையும் தாங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.! என்றே நம்புகிறேன். ஒருவேளை அதையும் தாங்கள் மறந்திருந்தால், அனைத்து விபரங்களையும் இனி வரும் காலங்களில் வெளியிடத் தயாராக இருக்கிறேன். இறுதியாக அந்த நேர்காணலில், “படம் வெற்றி பெற்று விட்டது.. அதனால், Studio Green நிறுவனத்தார், அமீருக்கு ஏதாவது நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும், திரு.ஞானவேல் அவர்கள் ஏதேனும் பணம் தரவேண்டும்..” என்றும் கூறியிருக்கிறீர்கள். நான் பெற விரும்புவது, “யாசகம் அல்ல.! என்னுடைய உரிமையை..!” என்பதை மீண்டும் மீண்டும் தங்களுக்கும், இப்பிரச்னை சார்ந்தோர்க்கும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என அந்த அறிக்கையில் அமீர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படியுங்கள்... தரம் கெட்ட விளையாட்டு விளையாடுறாங்க... பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது செம்ம கடுப்பில் கமல் - சிக்கப்போவது யார்?

click me!