நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! ரஜினி எடுத்த திடீர் முடிவு! அதிர்ச்சியில் மா.செக்கள்

By Selva KathirFirst Published Feb 17, 2019, 11:58 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியதும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி கூறியதும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் தனது நிலைப்பாடு என்ன என்பதை அறிவிக்க ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்துள்ளதாக கடந்த வாரமே ஆசியாநெட் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த வெள்ளியன்றே அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ரகசியமாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை வரும் தகவலை யாருக்கும் கசியவிடக்கூடாது என்று மாவட்டச் செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து சனிக்கிழமை சென்னை புறப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலும் தனது குடும்பத்தினரிடம் கூட ரஜினியை சந்திக்க செல்வதாக கூறவில்லை. மாறாக மன்றப்பணி செல்வதாக கூறிவிட்டே சென்னை வந்து சேர்ந்தனர். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் ஏறக்குறைய வருகை தந்த நிலையில், அனைவருமே நாடாளுமன்ற தேர்தலில் ரஜினி எடுக்கப்போகும் முடிவு அதிரடியாக இருக்கும் என்கிற கனவில் வந்து சேர்ந்தனர்.

மேலும் சிலர் எந்த தொகுதியில் போட்டியிடுவது, எம்.பியானால் என்ன செய்வது என்கிற அளவிற்கு கற்பனை குதிரையை தட்டிவிட்டனர். ரஜினி ரகசியமாக அழைப்பு விடுத்துள்ளதால் நிச்சயமாக பாசிட்டிவான அறிவிப்பாகவே இருக்கும் என்றும் அவர்கள் கருதினர். இப்படியாக சென்னை வந்து சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டனர். ரஜினி வந்த பிறகு யாரும் பேசக்கூடாது, தலைவர் என்ன சொல்கிறாரோ அதனை அமைதியாக கேட்க வேண்டும் என்று சுதாகர் அனைவருக்கும் பாடம் எடுத்துள்ளார்.

இதனை அடுத்து மிகுந்த எதிர்பார்ப்போடு மாவட்டச் செயலாளர்கள் காத்திருந்தனர், விறுவிறுவென வந்த ரஜினி, கையோடு கொண்டு வந்திருந்த ஒரு அறிக்கையை தானே படித்துள்ளார். முதல் வரியிலேயே நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று கூறியதும் மாவட்டச் செயலாளர்கள் பலரும் முகத்தை கவிழ்ந்து கொண்டதாகவும், சிலருக்கு விக்கலே வந்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். அறிக்கையை படித்து முடித்த ரஜினி, அதனை ஊடகங்களுக்கு அனுப்புமாறு கூறிவிட்டு, அனைவரும் எப்டி இருக்கீங்க? சாப்டுட்டு போங்கனு சொல்லிட்டு வந்த வேகத்தில் புறப்பட்டுவிட்டாராம்.

அனைத்தும் நொடிப் பொழுதில் நடந்தேறிவிட சில மாவட்டச் செயலாளர்கள் என்ன நடைபெற்றது என்பதே தெரியாமல் சிலை போல் அமர்ந்துள்ளனர். பிறகு ஒவ்வொருவரும் மற்றொருவர் முகத்தை பார்த்து பேந்த பேந்த முழித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். இப்படி ஒரு முடிவை தலைவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்று சிலர் புலம்பியுள்ளனர். போட்டியில்லை என்று கூறி யாருக்காவது ஆதரவு என்று கூறியிருந்தால் ஆவது தேர்தல் வேலையில் கல்லா கட்டியிருக்கலாம் என்று சிலர் எண்ண ஓட்டம் வெளிப்படையாக தெரிந்தது.

click me!