
Parasakthi Movie Actor Started Production House : துணை இயக்குநராக மலையாள சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கி, இயக்குநர், துணை நடிகர், தற்போது கதாநாயகன் என படிப்படியாக உயர்ந்து, ரசிகர்களின் பிரியமான நடிகராக உருவெடுத்துள்ளார் பேசில் ஜோசப், தற்போது திரைப்படத் தயாரிப்புத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். பேசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட் எனப் பெயரிடப்பட்டுள்ள தனது தயாரிப்பு நிறுவனத்தின் அனிமேஷன் டைட்டில் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு பேசில் இந்தத் தகவலை அறிவித்தார். அதே சமயம், அவர் தயாரிக்கும் முதல் திரைப்படம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : "இதுவரை செய்யாத ஒரு விஷயத்தை மீண்டும் முயற்சிக்கிறேன். அது தான் திரைப்படத் தயாரிப்பு. இதை எப்படி செய்வது என்று இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், கதைகளை இன்னும் சிறப்பாக, தைரியமாக, புதிய வழிகளில் சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த ஒரே விஷயம். இது எங்கு சென்று முடிகிறது என்று பார்ப்போம். பேசில் ஜோசப் என்டர்டெயின்மென்ட்க்கு வரவேற்கிறோம்" என்று பேசில் ஜோசப் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குஞ்சிராமாயணம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் பேசில் ஜோசப் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து கோதா, மின்னல் முரளி ஆகிய இரண்டு படங்களையும் இயக்கினார். மின்னல் முரளி இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிவபிரசாத் இயக்கிய 'மரணமாஸ்' படத்தில்தான் பேசில் கடைசியாக கதாநாயகனாக நடித்தார். திரையரங்குகளில் பெரும் வெற்றி பெற்ற இப்படம், ஓடிடியிலும் அமோக வரவேற்பைப் பெற்றது. மோகன்லால் - சத்யன் அந்திக்காடு கூட்டணியில் வெளியான ஹிருதயபூர்வம் என்ற படத்தில் பேசில் ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி இவர் தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கி இருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் பராசக்தி திரைப்படத்தில் பேசில் ஜோசப்பும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படம் வருகிற 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. தமிழில் பேசில் ஜோசப் அறிமுகமாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.