பிரதமர் மோடிக்காக தளர்த்தப்பட்ட சென்சார் போர்டு விதிகள்...அடுத்த வாரம் ரிலீஸாவதிலும் சிக்கல்...

By Muthurama LingamFirst Published Apr 7, 2019, 4:26 PM IST
Highlights

சென்சார் போர்டின் நடைமுறை விதிகளைத் தளர்த்தி, பிரதமர் மோடியின் சுயசரிதைப் படத்துக்கு தனிச் சலுகை காட்டும் தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
 

சென்சார் போர்டின் நடைமுறை விதிகளைத் தளர்த்தி, பிரதமர் மோடியின் சுயசரிதைப் படத்துக்கு தனிச் சலுகை காட்டும் தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ’பி.எம் நரேந்திர மோடி’ திரைப்படம் ஏப்ரல் 11-ந்தேதி வெளியாக உள்ளது. ஓமங் குமார் இயக்கி விவேக் ஓபராய் நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்துக்கு ஏற்கனவே எதிர்க்கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. இந்த திரைப்படம் தேர்தல் நேரத்தில் வெளியாவது பா.ஜனதாவுக்குச் சாதகமாக அமையும் என கருத்து தெரிவித்துள்ளன.

படம் வெளியாகும் 11ம் தேதி அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 20 மாநிலங்களின் வாக்குப்பதிவு அன்று நடைபெற உள்ளது.

இதுபற்றி மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் அமேய் கோப்கர் தன்னுடைய அறிக்கையில், “ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கு முன் அதன் தயாரிப்பாளர் தணிக்கை குழுவுக்கு 58 நாட்களுக்கு முன் சமர்ப்பித்திருக்க வேண்டுமென்பது தணிக்கை விதி. ஆனால், ஏன் மோடியின் திரைப்படத்துக்கு மட்டும் சிறப்புச் சலுகைகள் அளிக்கப்படுகின்றன? அரசாங்கத்தைச் சமாதானப்படுத்த இந்தப் படத்துக்காக தங்கள் விதிகளைத் தளர்த்திய தணிக்கைக் குழுவுக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி உடனடியாக தன் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும்” என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று மறுத்துள்ள தணிக்கைக் குழுவின் தலைவர் பிரசூன் ஜோஷி பி.எம்.நரேந்திரமோடி படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது சரியல்ல. அது இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது என்கிறார்.

click me!