ஒன்லி இளையராஜா....100 பாடல்கள்...10 மணி நேரம் கச்சேரி நடத்திய கேரள பாடகர்...

By Muthurama LingamFirst Published Nov 11, 2019, 3:07 PM IST
Highlights

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த அனுப் சங்கர் பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்,பாடலாசிரியர் என்கிற பன்முகம் கொண்டவர். 2002ம் ஆண்டு சென்னையில் தொடர்ந்து 40 மணி நேரம் இசைக்கச்சேரி நடத்தி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தவர்.இவர்  நேற்று(நவம்பர் 10) கோழிக்கோடில் உள்ள தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில், இளையராஜாவின் மெலடி பாடல்களைத் தேர்ந்தெடுத்து பத்து மணி நேரத்துக்கும் மேல் பாடி அரங்கில் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார்.

ஒரு பாடகர் இடைவிடாமல் 10 மணி நேரம் பாட முடியுமா ? அப்படியே பாடினாலும் ரசிகர்கள் அமர்ந்து பொறுமையாகக் கேட்பார்களா? கேட்க வைத்திருக்கிறார் கேரளாவின்  முன்னணிப் பாடகரான அனுப் சங்கர். இதில் இன்னொரு சுவாரசியம் நிகழ்ச்சியில் அவர் பாடிய அத்தனை பாடல்களும் இசைஞானி இளையராஜா இசையமைத்தவை.

கேரளாவின் திருச்சூரை சேர்ந்த அனுப் சங்கர் பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்,பாடலாசிரியர் என்கிற பன்முகம் கொண்டவர். 2002ம் ஆண்டு சென்னையில் தொடர்ந்து 40 மணி நேரம் இசைக்கச்சேரி நடத்தி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தவர்.இவர்  நேற்று(நவம்பர் 10) கோழிக்கோடில் உள்ள தாகூர் நூற்றாண்டு மண்டபத்தில், இளையராஜாவின் மெலடி பாடல்களைத் தேர்ந்தெடுத்து பத்து மணி நேரத்துக்கும் மேல் பாடி அரங்கில் உள்ள ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். சின்ன தம்பி படத்தில் வரும் உச்சந்தலை நெத்தியில பாடலை சிறு வயதில் கேட்ட அனூப், அதன் பின்னர் இளையராஜாவின் தீவிர ரசிகனாக மாறியிருக்கிறார். இளையராஜா எனும் நிலத்தில் விளைந்த இசையை உணவாக சுவைத்த அந்த ரசிகன், பின்னணி பாடகராகவும் மாறிய பிறகு, தான் அனுபவித்த இசையை மக்களுக்கும் பகிர முடிவெடுத்ததன் விளைவுதான் இந்த இசை விழா.

தாய் மூகாம்பிகை படத்தில் இடம்பெற்ற ஜனனி ஜனனி என்ற பாடலுடன் தன் இசை மாரத்தானை காலை 11.20 மணியளவில் துவங்கினார் அனூப் சங்கர். அதனைத் தொடர்ந்து ஜேசுதாசின் குரலில் இடம்பெற்ற அம்மா என்றழைக்காத(மன்னன்) பாடலை பாட ரசிகர்கள் ஆன்மீகத்திலும், தாய்மையிலும் கரைந்தனர். ஆயிரம் பாடல்களூக்கு மேல் இசையமைத்த இளையராஜாவின் இசையிலிருந்து கவனமாக தேர்ந்தெடுத்த 100 பாடல்களை பாடியிருக்கிறார் அனூப்.இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்களாக கருதப்படும் சுந்தரி கண்ணால் ஒரு சேதி...(தளபதி), கண்ணே கலைமானே...(மூன்றாம் பிறை), அந்த நிலாவத் தான் நான்...(முதல் மரியாதை), தூளியிலே ஆட வந்த..(சின்ன தம்பி) போன்ற பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார் இந்தக் கலைஞன்.

பாடல்களோடு மட்டும் நிற்காமல், ஒவ்வொரு பாடலும் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம், அந்த பாடலில் கையாளப்பட்டுள்ள இசை நுணுக்கங்கள் என சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து பரிமாறியிருக்கிறார் அனூப்.இந்த இசை மாரத்தானில் அனூப் உணவே உட்கொள்ளாமல் அவ்வபோது தண்ணீர் மட்டுமே அருந்தி பாடியிருக்கிறார். நிகழ்ச்சி இரவு 10.45 மணி வரை நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 25 இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்களித்திருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சி குறித்துப் பேசிய அனுப் ஷங்கர்,’இதற்கு முன் இப்படி ஒரே இசையமைப்பாளரின் பாடல்கள் மட்டும் ஒரு கச்சேரியில் பத்து மணி நேரம் இசைக்கப்பட்டிருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இந்நிகழ்ச்சியை நான் சாதனைக்காக செய்யவில்லை’என்கிறார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் இரண்டு பாடல்கள் பாடியுள்ள அனுப் இதுவரை ராஜாவின் இசையில் ஒரு பாடல் கூட பாடவில்லை.

 

click me!