விளக்கேற்றினால் காதல் பிரகாசிக்குமா..?

By Thiraviaraj RMFirst Published Apr 8, 2020, 5:08 PM IST
Highlights

இதயத்து விளக்கு; உயிர் எனும் நெய். ஏற்றுகிற விளக்கில், காதல் பிரகாசிக்கத்தானே செய்யும்...? 

திரைப்பாடல் - அழகும் ஆழமும்-9: சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே..!

தமிழ்நாட்டில், திரைப்படக் கதாநாயகனுக்குப் பட்டங்கள் கொடுத்துப் பாராட்டுவதை ஏறத்தாழ ஒரு மரபாகவே கொண்டாடி வருகின்றனர். இதற்கென்றே ஊருக்கு ஊர்பல அமைப்புகள் 'சேவை' செய்து வருகின்றன. இவ்வாறு தரப்படும் பட்டங்களை அதிக எண்ணிக்கையில் பெற்றவர் . 
1964இல் காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமான ரவிச்சந்திரன். இவர் நடித்த படங்களில் 'மெலடி' பாடல்கள் மிகுந்த பிரபலம் ஆயின. 
அதிலும், 1965இல் வெளியான, 'இதயக்கமலம்' படப் பாடல்கள், எவராலும் என்றும் மறக்க முடியாத ரகம். பனித் துளிகள் பூக்களை நனைத்தால், 
நிலவின் தண்ணொளி - மனதைக் குளிர்விக்கிறது. கதிர் ஒளியில் பொழுது விடிந்தால், நினைவலைகளால் மகிழ்ச்சி பொங்குகிறது.  
இறைவனின் இல்லம்; இதயத்து விளக்கு; உயிர் எனும் நெய். ஏற்றுகிற விளக்கில், காதல் பிரகாசிக்கத்தானே செய்யும்...? 

கண்ணதாசன் - கே.வி.மகாதேவன் கூட்டணி - அமர்க்களப் படுத்தி இருப்பார்கள்.  பி.சுசீலா தனித்துப் பாடிய  'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..' 'மலர்கள் நனைந்தன பனியாலே.." 'என்னதான் ரகசியமோ இதயத்திலே..' ஆகிய மூன்று பாடல்களும், தமிழ்த்திரை இசையில் தனியிடம் பெற்றவை. நாயகன் ரவிச்சந்திரனுக்கு பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் குரல் கனகச்சிதமாகப் பொருந்தி வந்தது. 


'தோள் கண்டேன்.. தோளே கண்டேன்..', 'நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்...'எல்லாமே இனிமையான பாடல்கள். அத்துடன், பாடல் வரிகளில் உள்ள எளிமை...! அடடா..! இன்பத் தமிழ் என்பது இதுதானோ...? கேட்டுப் பாருங்கள் - உங்கள் மனதும் குளிரும் - தமிழாலே! இசையாலே! தேனினும் இனிய குரலாலே! 

'இதயக் கமலம்' படத்தின் பாடல் வரிகள்- இதோ :

மலர்கள் நனைந்தன பனியாலே - என் 
மனதும் குளிர்ந்தது நிலவாலே.
பொழுதும் விடிந்தது கதிராலே - சுகம் 
பொங்கி எழுந்தது நினைவாலே!

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் - இரு 
கன்னம் குழிவிழ நகை செய்தான் 
என்னை நிலாவினில் துயர் செய்தான் -அதில் 
எத்தனை எத்தனை சுகம் வைத்தான். 

சேர்ந்து மகிழ்ந்து போராடி - தலை 
சீவி முடித்து நீராடி 
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி - பட்ட
காயத்தை சொன்னது கண்ணாடி.

இறைவன் ஒருவன் திருவீட்டில் - என் 
இதயத்தினால் ஒரு விளக்கேற்றி 
உயிர் எனும் காதல் நெய்யூற்றி  
உன்னோ டிருப்பேன் உன் அடி போற்றி. 

- (வளரும்.

 

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:-

அத்தியாயம்-5: கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!

அத்தியாயம்:-6 வீட்டை விட்டு வெளிய வந்தா நாலும் நடக்கலாம்... அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா..?

 

click me!