வீட்டுக்கு வீடு அங்கம் புதுவிதம்... தொட்டதும் பட்டதும் தோன்றுமே காவியம்..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2020, 6:53 PM IST
Highlights

திரைப்பாடல் -அழகும் ஆழமும்-  வீட்டுக்கு வீடு அங்கம் புதுவிதம்
 

தமிழ்த் திரையில் நகைச்சுவைப் படங்களுக்குப் பஞ்சமே இல்லை. நடிகர் நாகேஷ், எழுத்தாளர் கோபு, இயக்குநர் ஸ்ரீதர் காதலிக்க நேரமில்லை - யாரால் மறக்க முடியும்..?)  மூன்று ஜாம்பவான்கள் தரமான நகைச்சுவைப் படங்களால் கலகலப்பு ஊட்டி வளர்த்த துறை இது. சபாபதி, பலே பாண்டியா, உத்தரவின்றி உள்ளே வா, நவாப் நாற்காலி, அனுபவி ராஜா அனுபவி... நீள்கிறது பட்டியல். இவ்வகையில் ஒன்றுதான் 1970இல் வெளிவந்த 'வீட்டுக்கு 'வீடு'.

ஜெய்சங்கர் - லட்சுமி இணைந்து நடித்த படங்கள் எல்லாமே ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன. அதற்கு முக்கிய காரணம் - இனிமையான பாடல்கள். வளர்ந்து வருகிற பாடகராக இருந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இளைஞர்கள் மத்தியில் ஆரவாரமாக பிரபலம் ஆகிக் கொண்டு இருந்தார். அவரது குரல் ஜெய்சங்கருக்கு மிகப் பொருத்தமாய் அமைந்தது. இவருடன் எல்.ஆர்.ஈஸ்வரி சேர்ந்தால்..? நேயர்களை வசியம் செய்தன பாடல்கள். 

இசை அமைப்பு - எம்.எஸ்.விஸ்வநாதன். சொல்லவே தேவை இல்லை. மெல்லிசையின் 'அதாரிடி' ஆயிற்றே...! இன்றளவும் இதற்குஇணை இல்லை என்னும் அளவுக்கு, மிக நேர்த்தியாக இசையால், நெஞ்சங்களைக் கொள்ளை கொள்கிறது இப்பாடல். சாதாரண காதல் பாடல்தான். ஆனால், அபார தமிழ் நடை; அசத்துகிற குரல்கள். நம்மைக் கட்டிப்போட்டு விடுகிறது. அடடா... என்ன குரல்! என்ன குரல்! கேட்டுப் பாருங்கள்.. வேறு உலகத்துக்கு இட்டுச் செல்லும்.

பாடல் வரிகள் இதோ:  

அங்கம் புதுவிதம் 
அழகினில் ஒருவிதம் 
நங்கை முகம் 
நவரச நிலவு. 

நங்கை இவளிடம் 
நவரசம் பழகிய 
உங்கள் முகம் 
அதிசயக் கனவு.

நவரச நிலவு 
அதிசயக் கனவு. 

பூவிரி சோலைகள்
ஆடிடும் தீவினில்
பறவை பறக்கும் அழகோ... 
தேவியின் வெண்ணிற மேனியில் 
விளையாடும் பொன்னழகு.

மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் 
மயங்கிக் களிக்கும் அழகோ... 
காதலின் ஆனந்த போதையில் 
உறவாடும் உன் அழகு. 

கற்பனை அற்புதம் 
காதலே ஓவியம் 
தொட்டதும் பட்டதும் 
தோன்றுமே காவியம். 

தேன் சுவையோ இல்லை 
நான் சுவையோ என 
தேடி அணைக்கும் அழகே.. 
மைவிழி நாடகப் பார்வையில் 
கலை நாளும் சொல்லி விடு

பாலிலும் மெல்லிய 
பனியிலும் வாடிய
பருவகால இசையே..
பார்ப்பது ,மட்டும் போதுமா 
ஒரு பாடம் சொல்லிவிடு. 

வந்தது கொஞ்சமே 
வருவதோ ஆயிரம் 
ஒவ்வொரு நினைவிலும் 
உலகமே நம்மிடம். அங்கம் புதுவிதம் 
அழகினில் ஒருவிதம்... 

(வளரும்.

 

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

click me!