பல கைகள் மாறிச் சென்ற பொம்மைக்குள் வைக்கப்பட்ட 'டைம்-பாம்...' சஸ்பென்ஸ் கலந்த பாப்பா..!

By Thiraviaraj RMFirst Published May 5, 2020, 6:42 PM IST
Highlights

பலரின் கை மாறிய பொம்மை, ஒரு சிறுமியின் கையில் கிடைக்கிறது. அவள் அந்த பொம்மையைத் தன் தங்கையாக எண்ணிப் பாடுகிறாள். 

திரைப்பாடல் - அழகும் ஆழமும்-26: 'சஸ்பென்ஸ்' காட்சியில் ஒரு குழந்தைப் பாடல். 

ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறோம். ஒரே பொழுதுபோக்கு - டி.வி.தான். அதிலும், பழைய சீரியல் அல்லது பாடாவதிப் படங்களைப் போட்டு படுத்தி எடுக்கிறார்கள். என்ன செய்யலாம்...? தரமான பழைய படங்கள், டி.வி.யில் ஒளைபரப்பு ஆகாத படங்களாகத் தேர்ந்தெடுத்து பார்க்கலாம். இந்தப் பட்டியலில் முதன்மையானது - 
1964இல் வெளியான - 'பொம்மை'. 

வீணை வாசிப்பில் மகாமேதை - எஸ்.பாலசந்தர்தரமான பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். கே.பாலசந்தர் தெரியும்; எஸ்.பாலசந்தர் என்று ஒருவர் இருந்தாரா..? ஆமாம், சிவாஜி கணேசன் நடித்து, பாடல்களே இல்லாமல் வந்த படம் -'அந்த நாள்'. இவர் இயக்கியதுதான். 1965இல் வெளிவந்த திகில் படம் - 'நடு இரவில்' இவர் இயக்கிய மற்றொரு வெற்றிப் படம். படத்தைத் தயாரித்து இயக்கிய எஸ். பாலசந்தர், இசை அமைப்பையும் தானே செய்தார். பொம்மை படத்தில் தனது இசையில், 'நானும் பொம்மை,, நீயும் பொம்மை..' என்று ஒரு பாடலை, புதிய பாடகரைக் கொண்டு பாடச் செய்தார். அந்த அறிமுகப் பாடகர்தான் - 'கே.ஜே.ஜேசுதாஸ்'!  

1964இல் வெளியான பொம்மை - அருமையான 'த்ரில்லர்' படம். ஒருவரைக் கொல்வதற்காக ஒரு பொம்மைக்குள் 'டைம்-பாம்' வைத்து அனுப்புவான் வில்லன். அது வெடிப்பதற்கு உள்ளாக, பலரது கைகளில் மாறிச் செல்லும். படம் முழுக்க, 'சஸ்பென்ஸ்' எகிறிக் கொண்டே போகும். இப்போது வருகிற சஸ்பென்ஸ் படங்கள் எல்லாம், இப்படத்தின் முன், ஒன்றுமே இல்லை. காட்சிக்குக் காட்சி பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து விடுவார் இயக்குனர். 

அந்த பொம்மை, சாவி கொடுத்தால் நடந்து செல்லும். உள்ளே வைக்கப்பட்ட குண்டு - டைம்பாம் வகைதான். அதாவது குறித்த நேரத்தில் வெடிக்கக்கூடியது. அதேசமயம் ம்மை கீழே விழுந்து ஏதும் அதிர்ச்சி ஏற்பட்டாலும் வெடித்து விடலாம். பலரின் கை மாறிய பொம்மை, ஒரு சிறுமியின் கையில் கிடைக்கிறது. அவள் அந்த பொம்மையைத் தன் தங்கையாக எண்ணிப் பாடுகிறாள். சாவி கொடுக்கப்பட்ட பொம்மை நடந்து நடந்து மேசையில் நுனிக்கே வந்து விடுகிறது. கீழே விழுந்து வெடிக்கப்போகிற நேரம்.. சிறுமி வந்து அதனைத் தூக்கிக் கொண்டு, சாவி கொடுத்து மீண்டும் மேசையின் மேல் நடக்க விடுகிறாள். மீண்டும் மேசை நுனிக்கே வருகிறது அந்த பொம்மை... 

இந்தப் பின்னணியில், குழந்தைக்கே ஏற்ற வகையில் பொம்மையைப் பற்றிய ஒரு பாடல். வித்வான் வே.லட்சுமணன் எழுதியது. பாடியவர் - எல்.ஆர்.ஈஸ்வரி. 
பாடலைக் கேட்கிற போதெல்லாம் அந்தக் காட்சியின் சஸ்பென்ஸ் நம்மை சிலிர்க்க வைக்கும். வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள் - 'பொம்மை' (1964) 
ப்டம் ட்க்ஹொடங்கி சுமார் 20 நிமிடங்களில், 'பொம்மை' வந்து விடும். அதன் பிறகு..? அதகளம்தான். தமிழ்த் திரையின் ஆகச் சிறந்த சஸ்பென்ஸ் படம் இது. 

இனி, பாடல் வரிகள் இதோ: 
  பாடகர்: எல்.ஆர்.ஈஸ்வரி-  இசை: எஸ். பாலச்சந்தர்

தத்தித் தத்தி... தத்தி.. தத்தி..
தத்தித் தத்தி நடந்து வரும் 
தங்க பாப்பா 
இத்தனை நாள் எங்கிருந்தாய் 
சொல்லு பாப்பா.. 

தங்கை எனக்கு இல்லை என்று 
வந்த பாப்பா 
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் 
காட்டு பாப்பா..

கையை வீசி கடைக்குப் போகலாம் 
சின்ன பாப்பா
கம்மல் வாங்கி காதில் மாட்டலாம் 
செல்ல பாப்பா

சொக்காய் வாங்கி சொகுசாய் போடலாம் 
சின்ன பாப்பா 
மிட்டாய் வாங்கி மெதுவாய் திங்கலாம் 
செல்ல பாப்பா.....

காக்கா கிட்டே மை கிடைக்கும்
கண்ணுக்கு போடலாம் 
குருவி கிட்டே பூ கிடைக்கும் 
கொண்டைக்கு சூடலாம்   

பசுவின் கிட்டே பால் கிடைக்கும் 
பசியைப் போக்கலாம் 
கிளியின் கிட்டே பழம் கிடைக்கும் 
ருசித்துத் தின்னலாம் 

ஆசையோடு வாய் திறந்து 
பேசு பாப்பா 
அழகாக கை கொட்டி 
ஆடு பாப்பா

சிப்பாய் போல நடந்து காட்டு 
சின்ன பாப்பா 
அப்பா அம்மா எனக்கு தந்த 
ஜப்பான் பாப்பா.....

தத்தித் தத்தி நடந்து வரும் 
தங்க பாப்பா 
இத்தனை நாள் எங்கிருந்தாய் 
சொல்லு பாப்பா
தங்கை எனக்கு இல்லை என்று 
வந்த பாப்பா 
உன் தங்கக் கைக்கு முத்தம் தரேன் 
காட்டு பாப்பா...

(வளரும். 


- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:- 

1.சங்கம் காணாதது தமிழும் அல்ல... தன்னை அறியாதவள் தாயும் அல்ல..!

2.நம்மை அழைக்காத பாடல்...கண்ணை மூடினால், எண்ணம் மறையுமா..?

3.ஆடை முழுதும் நனைய நனைய அடித்த மழை... நீல விழிகள் மயங்கி மயங்கி கதை படித்த குடிசைப்பெண்..!

click me!