அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி..!

By Thiraviaraj RMFirst Published Apr 17, 2020, 6:57 PM IST
Highlights

இந்தப் பாடலைப் பொறுத்த மட்டில், அழகான ஆழமான தமிழ்ப் பாடல் பட்டியலில் இடம் பெற முடியாதுதான். பிறகு எப்படி...? 

இனிமையான காதல் கதை, மெல்லிய நகைச்சுவை, மனதை வருடும் இசை, ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பு... இந்த நான்கும் நன்கு அமைந்து விட்டால், வெற்றிகரமான திரைப்படம் கிடைத்து விடப் போகிறது. 1955இல் பிரசாத் இயக்கத்தில் வெளியான படம் - 'மிஸ்ஸியம்மா'! ஜெமினிகணேசன் - சாவித்திரி இணை - தமிழ்த்திரை ரசிகர்களுக்கு, ஒரு புதிய அனுபவம்.  

விரைப்பான நடை, நரம்புகள் புடைக்க வசனம், காதுகளைக் கிழிக்கும் இரைச்சல் இசை, திடுக்கிடும் திருப்பங்கள்... எதுவுமே இல்லாமல், பாந்தமாக யதார்த்தமான 
படமாக உருவானது - மிஸ்ஸியம்மா.இப்படத்தின் பாடல்களும் அப்படித்தான். அதிலும், ஏ.எம்.ராஜா - பி.லீலா இணைந்து பாடிய 'வாராயோ வெண்ணிலாவே..' படமாக்கப்பட்ட விதம், சிறப்பாக இருந்தது. 65 ஆண்டுகள் கழிது இப்போது பார்த்தாலும் நம்மால் ரசிக்க முடிகிறது.

பாடல் இயற்றியவர் - தஞ்சை ராமய்யதாஸ். (படத்தில் அப்படித்தான் போட்டு இருக்கிறார்கள்)   தஞ்சை ராமையாதாஸ் - கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் பெற்று, ஆசிரியராகப் பணிபுரிந்தவர். சுமார் 500 பாடல்கள் எழுதி உள்ளார்.'முருகா என்றதும் உருகாதா மனம்..' (அதிசயத்திருடன்) 'கல்யாண சமையல் சாதம்..' (மாயாபஜார்) 
'பிருந்தாவனமும் நந்தகுமாரனும்..' (மிஸ்ஸியம்மா) 'வா கலாப மயிலே..' (காத்தவராயன்) எல்லாம் இவர் எழுதியதுதான். 

இசை அமைப்பாளர்- ரஜேஸ்வர ராவ் - தெலுங்கு உலகில் கொடி கட்டிப் பறந்தவர்.  பிரேம பாசம், கடன் வாங்கிக் கல்யாணம், பானை பிடித்தவள் பாக்கியசாலி உள்ளிட்ட 
தமிழ்ப் படங்களில் பணிபுரிந்தவர்.  பாடகி பி.லீலா, அருமையான பல பாடல்களை வழங்கியவர். 'அமைதி யில்லாதென் மனமே..'(பாதாளபைரவி) 'தாழையாம் பூமுடித்து..' (பாகப்பிரிவினை) 'ஆஹா.. இன்ப நிலாவினிலே..' (மாயாபஜார்) 'குற்றாலம் அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா..' (நல்லவன் வாழ்வான்)

இந்தப் பாடலில் பல சொற்கள், தமிழே இல்லை. சரளமாக வடமொழி கலந்து பாடல் எழுதுவது அன்றைய தினம் வழக்கமாக இருந்தது. அதனால் இந்தப் பாடலைப் பொறுத்த மட்டில், அழகான ஆழமான தமிழ்ப் பாடல் பட்டியலில் இடம் பெற முடியாதுதான். பிறகு எப்படி...? பாடகி பி.லீலா, கவிஞர் தஞ்சை ராமையாதாஸ், இசைமேதை ராஜேஸ்வரராவ் - ஆகிய மூன்று விற்பன்னர்களை நினைவில் கொள்ள இப்பாடல் தேவை ஆகிறது. பாடலின் முதல் இரண்டு வரிகளில் - அழகு தமிழ் கொஞ்சுகிறது. 

இதோ அந்தப் பாடல் வரிகள்: 

வாராயோ வெண்ணிலாவே? நீ 
கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

அகம்பாவம் கொண்ட சதியே.. அறிவால் உயர்ந்திடும் பதி நான்
அகம்பாவம் கொண்ட சதியே.. அறிவால் உயர்ந்திடும் பதி நான்
சதி பதி விரோதம் மிகவே சிதைந்தது இதந்தரும் வாழ்வே

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
வாக்குரிமை தந்த பதியால் வாழ்ந்திடவே வந்த சதி நான்
நம்பிடச் செய்வார் நேசம் நடிப்பதெல்லாம் வெளிவேஷம்

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

தன் பிடிவாதம் விடாது, என் மனம் போல் நடக்காது
நமக்கென எதுவும் சொல்லாது நம்மையும் பேச விடாது

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே?

அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
அனுதினம் செய்வார் மோடி அகமகிழ்வார் போராடி
இல்லறம் இப்படி நடந்தால் நல்லறம் ஆமோ நிலவே

வாராயோ வெண்ணிலாவே? கேளாயோ எங்கள் கதையே?
வாராயோ வெண்ணிலாவே? (வளரும். 

- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

இதையும் படியுங்கள்:- 

1.கட்டாயத் திருமணத்தை முறியடிக்க பகீர் திட்டம்... வீட்டிற்குள் நுழைந்த வளையல்காரன்..!

2.தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டிலே... ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை..!

3.டி.எம்.எஸை பின்னுக்கு தள்ளிய கணீர் குரல்... கேட்பவர்களை சுண்டி இழுக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி..!
 

click me!