எம்.எஸ்.வி.யின் அற்புதங்களை அனுபவிக்க வேண்டுமா..? தேனோடு கலந்த தெள்ளமுதம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2020, 5:59 PM IST
Highlights
நமக்காகவும் மற்றவர்க்காகவும் வீட்டிலேயே இருப்போம். ஆனாலும்... எப்படித்தான் பொழுது ஓட்டுவது தெரியவில்லையே... என்று திணறுகிறவர்களுக்கு இந்த வாய்ப்பு. 
 
திரைப்பாடல் - அழகும் ஆழமும்- 12:  நில் கவனை காதலி

நமக்காகவும் மற்றவர்க்காகவும் வீட்டிலேயே இருப்போம். ஆனாலும், எப்படித்தான் பொழுது ஓட்டுவது தெரியவில்லையே... என்று திணறுகிறவர்களுக்கு இந்த வாய்ப்பு. 

ஊரடங்குக் காலம். வீட்டுக்குள்ளேயே 'அடைந்து கிடக்க' வேண்டி உள்ளது. நமக்காகவும் மற்றவர்க்காகவும் வீட்டிலேயே இருப்போம். ஆனாலும், எப்படித்தான் பொழுது ஓட்டுவது தெரியவில்லையே... என்று திணறுகிறவர்கள்,  இன்றைக்குள்ள தரத்துடன், பழைய படம் பார்க்கலாம். அப்படி ஒன்றுதான் - 1969இல் வெளியான - 'நில் கவனி காதலி'. 

விறுவிறுப்பான துப்பறியும் கதை. 'சி.ஐ.டி. சங்கர்' பாத்திரத்தில் ஜெய்சங்கர்; கதாநாயகியாக பாரதி. கூடவே நம்பியார், நாகேஷ் வேறு. கேட்க வேண்டுமா... 'நேரம் போறதே தெரியாது..'  அன்று இருந்த தொழில் நுட்பத்துக்கு இந்தப் படம் உண்மையிலேயே ஒரு 'டிரெண்ட் செட்டர்'தான். 

இசை அமைப்பு - எம்.எஸ்.விஸ்வநாதன். கலக்கி இருப்பார் மனுஷன். எல்லாப் பாடல்களுமே ஹிட் ஆயின. ஒவ்வொன்றும் தேனோடு கலந்த தெள்ளமுதம்! அவளை எங்கேயோ பார்த்து இருக்கிறான். எங்கே என்றுதான் நினைவில் இல்லை. 
நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறான். இதோ.. பக்கத்தில்.. அருகே.. மிக அருகே... 

புதுநிலவாய், பூச்சரமாய், மதுமலராய், மாணிக்கமாய் அவள் இருக்கிற போது, 'யோசித்துப் பார்க்க' விடாமல் இடையூறு செய்கிறது நளினமான அவளின் ஆட்டம். நடையும் குரலும் நகையும் வடிவும் அவனை மெய்மறக்க வைக்கின்றன. 
பாடுகிறான் - நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது பாடல். ஆடம்பர அரங்க அமைப்பு இல்லை; ஒரு மொட்டை மாடியில் பாடுவதுதான். கையைக் காலை உதறிக் கொண்டு 'பிரேக்' டான்ஸ் இல்லை; சாதாரண அசைவுகள்தான். 

பின்னணியில் 'அந்தக் கால' சென்னையின் தோற்றம்... இயல்பான இளமையில் நாயகன் - நாயகி... கலக்குகிறது பாருங்கள் இந்தக் காவியப் பாடல்.   கவிஞர் வாலியின் வரிகளில் இளமை துள்ளுகிறது. பாடும் குரலோ... பி.பி.ஸ்ரீனிவாஸ். இடையிடையே, 'ஹம்மிங்' - எல்.ஆர்.ஈஸ்வரி. ஆஹா.. என்னவொரு 'காம்பினேஷன்'! 

எப்போது கேட்டாலும் 'அந்தக் காலத்துக்கு' இழுத்துக் கொண்டு போகிற இப்படைப்பு, எம்.எஸ்.வி.யின் அற்புதங்களில் ஒன்று. 
கேட்டு பார்த்து 'அனுபவியுங்கள்!
 
பாடல் வரிகள் இதோ: 

எங்கேயோ பார்த்த முகம்
இரு விழி மேடையில் 
எழுதிய ஓவியம் 
புது நிலவோ பூச்சரமோ 
மதுமலரோ மாணிக்கமோ 
எங்கேயோ பார்த்த முகம். 

எழுந்தே நடந்தால் மயில்தான் இவளோ 
கனி வாய் மொழிந்தால் குரல்தான் குயிலோ 
கலைக்கொரு கோயில் இவள்தானோ 
ஊர்வசியோ மேனகையோ வான்பிறையோ தாரகையோ

இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்.. 
நிழல்போல் குழல்தான் குடைபோல் அமைய 
தளிர் பூங்கொடிபோல் இடைதான் அசைய 
வளைக்கரம் ஆட வருவாளோ 
ஊர் மழங்கும் பேரழகோ ஓடிவரும் தேரழகோ 
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்....
எங்கேயோ பார்த்த முகம். 

(வளரும்
 
- பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி
இதையும் படியுங்கள்:- 
டி.எம்.எஸை பின்னுக்கு தள்ளிய கணீர் குரல்... கேட்பவர்களை சுண்டி இழுக்கும் எல்.ஆர்.ஈஸ்வரி..!  






 
click me!