Actress Radhika Apte : பிரபல நடிகை ராதிகா ஆப்தே, ஒரு விமான நிலையத்தில் தனக்கு தன்னுடன் பயணித்த பயணிகளுக்கும் நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார்.
வேலூரில் பிறந்து இன்று இந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் ராதிகா ஆப்தே. தமிழில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தான் திரையுலகில் இவர் அறிமுகமானார். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து கடந்த 2016ம் ஆண்டு இவர் நடித்த கபாலி திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டானது. இந்நிலையில் இன்று தனது விமானநிலையத்தில் நடந்த விஷயம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நான் இதை சொல்லியே ஆகவேண்டும்.. இன்று காலை 8:30 மணிக்கு நான் விமான நிலையம் வந்தேன். இப்போது 10:50 ஆகிவிட்டது, இன்னும் நான் விமானம் ஏறவில்லை. ஆனால் விமான நிலைய ஊழியர்கள் நாங்கள் பயணிகளை விமானத்தில் ஏறுகிறோம் என்று கூறி, அனைத்து பயணிகளையும் ஏரோபிரிட்ஜில் உள்ளே செல்ல வைத்து அதை லாக் செய்துவிட்டனர்.
சிறிய குழந்தைகளுடன் உள்ள பயணிகள், முதியவர்கள் என்று பலரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்கு செல்லும் கதவுகளை திறக்கவில்லை. விமான நிலைய ஊழியர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. வெளிப்படையாக என்ன நடக்கிறது என்றும் கூறவில்லை.
அவர்கள் புதிய குழுவினருக்காகக் காத்திருக்கிறார்கள் ஆனால் அவர்கள் எப்போது வருவார்கள் என்றும் அவர்களுக்குத் தெரியாது. தண்ணீர் குடிக்க முடியாமல், கழிவறைக்கு கூட அவசரத்திற்கு செல்ல முடியாமல் பலரும் காத்துக்கிடக்கின்றனர். விமான நிலைய அதிகாரிகள் என்ன செய்கின்றார்கள் என்று தான் தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் எந்த விமான நிலையத்தில் இப்படி நடந்தது என்று அவர் கூறவில்லை.
ஆனால் ராதிகாவின் பதிவிற்கு பதில் அளித்துள்ள பிரபல நடிகையும் உலக நாயகனின் மகளுமான அக்ஷரா ஹாசன், மும்பை விமானநிலையத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அங்கு இப்படி நடப்பது முதல் முறையல்ல என்றும் அவர் கமெண்டில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.