விபத்தில் சிக்கிய நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி! மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை!

By manimegalai aFirst Published Jun 28, 2020, 12:11 PM IST
Highlights

பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, நேற்று இரவு திடீர் என விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, நேற்று இரவு திடீர் என விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லங்குடி கருப்பாயி, பல நாட்டுப்புற பாடல்களை பாடி மிகவும் பிரபலமானவர்.  இவர் சிவகங்கை மாவட்டத்தில் மதுரை தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர். எனவே தன்னுடைய பெயரில் ஊரின் பெயரையும் இணைத்து கொண்டார்.

பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிய இவர்,  தமிழ்த் திரைப்படங்களிலும், சில பாடல்களை பாடியுள்ளது மட்டும் இன்றி நடித்தும் உள்ளார். அந்த வகையில், ஆண் பாவம், கோபாலா கோபாலா, மற்றும் ஆயிசு நூறு ஆகிய படங்களில் நடித்துள்ளது மட்டும் இன்றி இந்த படங்களில் சில பாடல்களையும் பாடியுள்ளார்.

தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படும் இவர் பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்து வருகிறார்.  அனைத்திந்திய வானொலியில் நிகழ்கலை நிகழ்த்துனராகத் தன் பணியைத் தொடங்கிய இவர், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் 1993இல் கலைமாமணி விருது பெற்றார்.

பாடல் ஒலிப்பதிவிற்கு சென்றபோது இவரது கணவர் இறந்ததால், திரைத்துறையிலிருந்து விலகினார். தன் மகளின் இறப்பினாலும் உடல் வலுவிழந்து ஓய்வெடுக்கிறார். மேலும் வறுமையின் காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும், உதவித்தொகை வழங்கவேண்டும் என முதலமைச்சருக்கு மனு கொடுத்தார். இதனால் இவருக்கு உதவி தொகை அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி போல் , சாலையை கடக்க முயன்ற இவர் எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதி விபத்திற்கு ஆளானார். உடனடியாக இவரை காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவருக்கு இடது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

click me!