
தமிழ் சினிமாவில் காலம் காலமாக சாதிக்கு எதிரான கருத்துகள், கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் எந்த வகையிலும் நீர்த்துப் போகாத நிஜத்திற்கு நெருக்கமான அரசியலை சினிமாப்படுத்தி தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பல புதிய விவாதங்களை ஏற்படுத்தியவர் இயக்குனர் பா.ரஞ்சித்.
2012-ஆம் ஆண்டு வெளியான 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பா.ரஞ்சித், அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து வடசென்னையைக் கதைக்களமாக்கி இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகின் உச்சநட்சத்திரமான ரஜினிகாந்த்தை வைத்து 'கபாலி', 'காலா' படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இவ்விரு படங்களும் பேசிய அரசியல், தமிழ் சினிமாவிற்குப் புதியதில்லை என்றாலும், அதில் இருந்த காரம் தமிழ் சினிமாவிற்குப் புதிதானதே. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை, அதே சமூகப் பின்புலத்தில் இருந்து வந்த ஒருவர் பேசியது பெரிய விவாதத்தையும், அத்தகைய விவாதங்களுக்குப் புதிய களத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இயக்கம் மட்டுமில்லாது பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் மூலம் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான 'ரைட்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரைப்படங்கள் மட்டுமல்லாது சமூக தளங்களிலும் மாற்றத்திற்கான பல்வேறு முன்னெடுப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார் பா.ரஞ்சித். இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.ரஞ்சித். இதனை தனது பேட்டிகளிலும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் ‘சார்பட்டா’ துஷாரா விஜயன், அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இது குறித்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த படத்தில் இரஞ்சித்தின் வழக்கமான டீம் இருக்காது என்று முன்னரே முடிவெடுக்கப்பட்டதால் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி, கலை இயக்குநர் ராமலிங்கம் ஆகியோர் இந்தப்படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.