‘கர்ணன்’ படத்திற்கு புது சிக்கல்... நடிகர் தனுஷுக்கு சிவாஜி சமூக நலப்பேரவையில் இருந்து பறந்த அதிரடி கடிதம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 13, 2020, 2:46 PM IST
Highlights

ஒரு சமூகத் திரைப்படத்திற்கு “கர்ணன்” என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.  

மாரிசெல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் முதன் முறையாக உருவாகியுள்ள “கர்ணன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நெல்லை அருகே செட் அமைத்து நடைபெற்று வந்த “கர்ணன்” பட ஷூட்டிங் கடந்த 9ம் தேதி நிறைவடைந்ததாக படக்குழு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. தற்போது படுவேகமாக போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் “கர்ணன்” பட டைட்டில் தொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் தனுஷுக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில்,  தாங்கள் தற்போது “கர்ணன்” என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்து வருவதாக அறிகிறோம். நடிகர் திலகம் சிவாஜியின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர் திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான். 

ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின் கதைக்களத்தைத் தாங்கி கால காலத்திற்கும் நிலைத்து நிற்கக்கூடியதாக இருக்கும்... அந்த வகையில் தான் தாங்கள் நடித்து ஏற்கனவே “திருவிளையாடல்“ என்ற தலைப்பில் திரைப்படம் வெளிவரவிருந்தபோது எதிர்ப்பு தெரிவித்தோம்.  அதன்பிறகு “திருவிளையாடல் ஆரம்பம்“ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு திரைப்படம் வெளிவந்தது.

அதே சமயத்தில். தாங்கள் நடித்து வெளிவந்த “உத்தமபுத்திரன்“ திரைப்படத்திற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். அதுபோலவே. ஆண்டவன் கட்டளை,  ராஜா, பச்சை விளக்கு என்று நடிகர் திலகம் நடித்த படங்களின் பெயரிலேயே மீண்டும் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதுபோன்ற சமூகப்படங்களின் பெயர்களை மீண்டும் வைப்பதற்கு யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை.  ஆனால், சரஸ்வதி சபதம், திருவிளையாடல், கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் போன்ற குறிப்பிட்ட தலைப்புகள் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது. ஏனெனில் அந்தத் திரைப்படத் தலைப்பின் தனித்துவம் அப்படி.

“கர்ணன்” என்றாலே கொடுப்பவன். கொடைவள்ளல்தான்.  ஆனால். தாங்கள் நடிக்கும் திரைப்படத்தின் கதையோ உரிமைக்காகப் போராடும் ஒருவருடைய கதை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது, மகாபாரதக் கதையையே மீண்டும் உருவாக்குகிறோம். அதில் “கர்ணன்” கதாபாத்திரம் வருவதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பரவாயில்லை. ஒரு சமூகத் திரைப்படத்திற்கு “கர்ணன்” என்று பெயரிட்டு அதில் தாங்கள் நடிப்பது ஏற்கத்தக்கதல்ல.  இது லட்சோபலட்ச நடிகர் திலகம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, மகாபாரதத்தை நேசிக்கும் கோடிக்கணக்கானவர்களின் மனதையும் புண்படுத்தக்கூடியதாக அமையும். எனவே. “கர்ணன்” என்ற தலைப்பினை மாற்றி அமைத்திடவேண்டுமென நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.' என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

click me!