கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு? ஜெயஸ்ரீக்காக கொந்தளித்த எம்.எஸ்.பாஸ்கர்!

By manimegalai aFirst Published May 14, 2020, 9:39 PM IST
Highlights

விழுப்புரம் திருவெண்ணய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரையில் அதிமுகவைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் கலியபெருமாள்‌, முருகன் ஆகியோர் முன்பகையில் காரணமாக, அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரியின் மகள் ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 
 

விழுப்புரம் திருவெண்ணய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரையில் அதிமுகவைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் கலியபெருமாள்‌, முருகன் ஆகியோர் முன்பகையில் காரணமாக, அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரியின் மகள் ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக நிர்வாகிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட இருவரையும் அதிமுகவிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. மேலும்  ஜெயஸ்ரீ குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

இந்த சம்பவத்திற்கு, அரசியல் காட்சிகளை சேர்ந்தவர்களும், பிரபலங்களும் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது  இதுகுறித்து தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் வேதனையோடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... "பத்தாம் வகுப்பு மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இருவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக அந்தக் கட்சியையும், அதன் தலைவரையும் குறை சொல்வதும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பிதற்றுவதும் எந்த வகையில் நியாயம்?

ஒருவேளை இந்த இரண்டு இழிபிறவிகளும் ராஜினாமா செய்யச் சொல்வோரின் கட்சியைச் சார்ந்திருந்தால் அவர்கள் தங்கள் கட்சியையே கலைத்து விடுவார்களா? அநியாயமாக ஒரு உயிர் பறிக்கப்பட்டிருக்கும் நிலையில், மகளைப் பறிகொடுத்த பெற்றோர் கதறிக் கொண்டிருக்கும் வேளையில் கீழ்த்தரமான அரசியல் எதற்கு?

முன்விரோதம், மது போதை, ஆத்திரம், இப்படி ஏதோ ஒன்றில் அவர்கள் சுயகட்டுப்பாடின்றி செய்து விட்டார்கள் என்று சப்பைக்கட்டு கட்டாமல் எரித்துக் கொல்லப்பட்ட அந்த அப்பாவிப் பெண் சிறுமதுரை ஜெயஶ்ரீக்கும், மகளைப் பறிகொடுத்து பரிதவித்து நிற்கும் அந்த ஏழைப் பெற்றோருக்கும், குடும்பத்திற்கும் நியாயம் கிடைக்க சட்டம் தன் கடமையை சரியாகச் செய்ய வேண்டும். அந்த அரக்கர்கள் இருவருக்கும் நீதிமன்றம் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

இவர்களுக்காக வழக்கு நடத்த வழக்கறிஞர்கள் யாரும் முன் வரக்கூடாது. இவர்களுக்கு கண்டிப்பாக ஜாமீன் வழங்கக் கூடாது. இவர்களை கட்சியை விட்டு நீக்குவதோ, கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதோ மட்டும் நியாயம் ஆகிவிடாது என எம்.எஸ்.பாஸ்கர் வெளியிட்டுள்ள தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

click me!