வீடு கட்டி தருவதாக, நடிகர் அஜித் பெயரை கூறி... அவரின் ரசிகரிடமே பணம் வாங்கி மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், அஜித் ரசிகர் மன்றம் மூலமாக வீடு கட்டி தருவதாக அஜித் ரசிகர் ஒருவரிடம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாக, ராஜேஸ்வரி என்பவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் கூறியுள்ளது, மற்ற அஜித் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், விக்ரமசிங்கபுரம்.. கட்டப்புலி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி. பல ஆண்டுகளாக ஐயப்பன் அஜித்தின் தீவிர ரசிகர் என கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட அதே ஊரை சேர்ந்த சிவா என்பவர், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும், எனவே அஜித் அவர் மூலம் கஷ்டப்படும் ஏழை ரசிகர்களுக்கு சுமார் 15 லட்சம் செலவில், வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளதாக கூறி ஆசை காட்டியுள்ளார்.
வீடு கட்டித் தருவதற்கு முன்பாக, பத்திர செலவு தொகை மட்டும் நீங்கள் முன்பே செலுத்தி விட்டால்.. வீட்டு கட்டுவதற்கான 15 லட்சம் மற்றும் பத்திரப்பதிவு செலவு, தொகை இரண்டும் சேர்த்து உங்களுடைய வங்கி கணக்கிற்கு சில நாட்களில் வந்து விடும் என சிவா கூறி ராஜேஸ்வரி மற்றும் ஐயப்பன் தம்பதிகளை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஆரம்பத்தில் இது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய ஐயப்பன் ராஜேஸ்வரியை தம்பதியை, நம்ப வைப்பதற்காக, சுரேஷ் சந்திரா அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து, ஐயப்பன் மற்றும் ராஜேஸ்வரி இடம் பேச வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் வீடு கட்டி தரப்படும், என்கிற ஆசையில் சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரை சிவாவிடம் கொடுத்து ஏமார்த்துள்ளார்.
பல நாட்கள் ஆகியும் சிவா இது குறித்து எவ்வித தகவலையும் தெரிவிக்காததாலும், ஏமார்ந்ததையும் உணர்ந்த ஐயப்பன்- ராஜேஸ்வரி தம்பதி தற்போது தங்களுக்கு நியாயம் வேண்டும் என சிவாவிடம் சென்று கேட்டபோது, இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் தாங்கள் பணத்தை மீட்டு, தருமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடிகர் அஜித்தின் ரசிகர் ஐயப்பன் மற்றும் அவருடைய மனைவியை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.