தமிழில் விக்ரம் நடித்த மஜா படத்தினை இயக்கிய பிரபல மலையாள நடிகர் ஷஃபி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழில் நடிகர் விக்ரம் நடித்த மஜா படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஷஃபி காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று நள்ளிரவு அவர் உயிர் பிரிந்தது.
யார் இந்த ஷஃபி?
தியேட்டரில் வயிறு குலுங்க சிரிக்க வைப்பது எல்லா இயக்குநர்களாலும் முடியாத காரியம். அதை பல முறை எளிதாகச் செய்த இயக்குநர் ஷாஃபி. மலையாள இயக்குநர் சித்திக்கின் மருமகனும், ரஃபியின் தம்பியுமான ஷாஃபிக்கு சினிமாவில் நுழைவது எளிதாக இருந்தது. ஆனால், அவரது படங்கள் மக்களிடம் ஏற்படுத்திய தொடர்பும், அவை ஏற்படுத்திய அலையும் ஒரு இயக்குநராக அவரது திறமைக்குச் சான்றாகும். மலையாளத்தில் நகைச்சுவைப் படங்களுக்கு புதிய பரிமாணம் கொடுத்த இயக்குநர்கள் சித்திக் மற்றும் லால். அவர்களின் வரிசையில் ஷாஃபி இருந்தார்.
சித்திக் லால், ரஃபி மெக்கார்ட்டின், ராஜசேனன் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய பின்னர் ஷாஃபி சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தார். 2001 இல் வெளியான 'ஒன் மேன் ஷோ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஷாஃபி. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு இயக்குநரை சினிமா உலகம் மதிப்பிடுவது அவரது இரண்டாவது படத்தைப் பார்த்துதான். அந்த வகையில் மலையாளத்தில் அவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான 'கல்யாணராமன்' பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இரண்டு படங்கள் வெற்றி பெற்றதால், ஷாஃபி மலையாள திரையுலகில் ஒரு பிராண்டாக மாறினார்.
இதையும் படியுங்கள்... புதுப்பேட்டை - தெறி போன்ற படங்களில் நடித்த நடிகர் ஜெயசீலன் காலமானார்!
தொடர்ச்சியாக 6 ஹிட்
தோல்விகளை சந்திக்காமல் தொடர்ச்சியாக ஆறு படங்களை இயக்கினார். மலையாளத்தில் இது ஒரு அரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 'ஒன் மேன் ஷோ', 'கல்யாணராமன்', 'புலிவால் கல்யாணம்', 'தொம்மனும் மக்களும்', 'மாயாவி', 'சாக்லேட்' என ஷாஃபி இயக்கிய முதல் ஆறு படங்களும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தன. அப்படங்களின் வெற்றியை தொடர்ந்து அவர் தமிழில் விக்ரம் நடித்த மஜா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் அசின், வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அப்படத்தில் இடம்பெறு வடிவேலு காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அதற்கு காரணாம் ஷாஃபி தான்.
இப்படி பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்த இயக்குனர் ஷஃபி உடல்நலக்குறைவால் மரணமடைந்திருப்பது மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் சீயான் விக்ரம் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடன் இன்று மாலை 4 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... 'தங்கலான்' படத்தை விட பல கோடி அதிகம்! 'வீர தீர சூரன்' படத்திற்கு விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?