நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ள 'ருத்ரன்' படத்திற்கு, நீதிமன்றம் தடை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் - ப்ரியா பவானி ஷங்கர் நடித்து இயக்குனர் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், இப்படத்தை வெளியிட தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இந்தி மற்றும் பிற வட இந்திய மொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்ஸா குளோபல் வென்சர்ஸ் என்ற நிறுவனம் பெறுவது தொடர்பாக, ருத்ரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது.
12 கோடியே 25 லட்சம் ரூபாய் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்த ரெவன்ஸா நிறுவனம் முதல் கட்டமாக 10 கோடி ரூபாய் செலுத்தியிருந்தது. இந்நிலையில், 4 கோடியே 50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் எனக் கூறிய தயாரிப்பு நிறுவனம், திடீரென இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக, மத்தியஸ்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி படத்தை வெளியிட பட குழு முடிவு செய்துள்ளதாகவும், திட்டமிட்டபடி படத்தை வெளியிட அனுமதித்தால், தங்களுக்கு 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரெவன்ஸா குளோபல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, படத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனால் நாளை மறுதினம் வெளியாக இருந்த இப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.