
‘தர்பார்’ படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, தனிப்பட்ட நபரை குறித்து எழுதப்பட்டது அல்ல என்று லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ரஜினி நடிப்பில் வெளியாகி உள்ள ‘தர்பார்’ படத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்து ஒரு வசனம் எழுதப்பட்டிருந்தது. ‘காசிருந்தால் ஷாப்பிங்கே போகலாம்’ என்று சிறைச்சாலையில் ரஜினியிடம் சொல்வது போன்று அந்தக் காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சி பற்றி செய்தியகள் வெளியான நிலையில், அமைச்சர் ஜெயக்குமார், “பணம் பாதாளம் வரைக்கும் பாயும் அதேசமயத்தில் பணம் சிறைச்சாலை வரைகூட பாயும் என்று சசிகலாவை சுட்டிக்காட்டி படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே அதை பற்றி பேச விரும்பவில்லை. திரைப்படங்கள் வாயிலாக நல்ல கருத்துக்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வசனம் படத்தில் இடம் பெற்றது குறித்து சசிகலா தரப்பும் அமமுகவினரும் அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறிப்பிடுகையில், “போலீஸ் அறிக்கையில் சசிகலா ஷாப்பிங் போனதாக எங்கேயும் குறிப்பிடவில்லை. அந்தக் காட்சிகளை படத்தில் நீக்க வேண்டும். அப்படி நீக்கப்படாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் இந்தச் சர்ச்சை வசனம் தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “எங்களின் ‘தர்பார்’ திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறித்து எழுதப்பட்டது அல்ல. இருப்பினும், அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்தால், படத்திலிருந்து நீக்குவதாக” தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.