விஜய் டிவியில் ஓளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகர் சேஷு, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
விஜய் டிவியில், ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சேஷு. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கிய சேசுவுக்கு, நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தின் ஒரு சிறு ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் கெட்டியாக பிடித்து கொண்ட சேஷு, அடுத்தடுத்து பல படங்களில் சப்போர்டிங் ரோலில் நடித்தார்.
ஏனோ திறமையாக காமெடி செய்யும் தகுதி இருந்தும், இவரால் முன்னணி இடத்திற்கு வரமுடியவில்லை. இதற்க்கு காரணம், வெள்ளித்திரையில் நிலவி வரும் போட்டி எனலாம். எனினும் லொள்ளு சபா சேஷுவுக்கு தன்னுடைய படங்களில்... கவனிக்கப்படும் கதாபாத்திரம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் A1 திரைப்படத்தில் " நான் யாருன்னு என்கிட்ட கேட்கிறதை விட, வேற யாருகிட்டயாவது போய் நான் யாருன்னு கேட்டு பாரு.. அச்சச்சோ அவரா பயங்கரமான ஆளாச்சே.! அவர் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா என்று சொல்லுவாங்க..." என பேசி பலரையும் சிரிக்க வைத்தார்.
அதே போல் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்திலும், சேஷுவின் கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. அதே போல் நடிகர் சேஷு தான் நடித்து சம்பாதித்த பணத்தை கொண்டு.. 5 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்த தகவலும் வெளியாகி வைரலானது. இதன் மூலம் அவரின் நல்ல மனதையும் பலர் பாராட்டி வந்தனர்.
60 வயதாகும் சேஷு, தற்போது சில திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில்... இவருக்கு கடந்த மார்ச் 15-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ சிகிச்சையா இவருக்கு அளிக்கப்பட்டு வந்த நிலையில், இவரின் சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுவரும் தகவல் வெளியானது. பின்னர் பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் சிலர் உதவி செய்தனர்.
இந்நிலையில் நடிகர் சேஷு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் பள்ளிக்கரணையில் உள்ள இவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இறுதிச்சடங்குகள் காலை 8 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.