Jai Bhim controversy: படத்தோட கருத்தை தியேட்டரிலேயே விட்டுட்டு போங்க.. நடிகர் ராதாரவி பொளேர்.!

By Asianet TamilFirst Published Nov 24, 2021, 9:13 AM IST
Highlights

‘ஆன்டி இண்டியன்’ படம் வெளியாகும்போது, அந்தப் படத்தை பற்றி பேசுவார்கள், விமர்சிப்பார்கள். 'ஆன்டி இண்டியன்' படத்திலும் பல சர்ச்சைகள் உள்ளன.

ஒரு படத்தோட கருத்துக்களை சினிமா தியேட்டரிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போக வேண்டும். அதுதான் சிறந்தது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் வட்டாரத்திலும் சரி, சினிமா வட்டாரத்திலும் சரி, கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ‘ஜெய்பீம்’ படம்தான் ஹாட் டாபிக். வன்னியர்களின் பண்பாட்டு சின்னமான அக்னி குண்டத்தைக் காட்டியது, படத்தில் சப்இன்ஸ்பெக்டருக்கு வைக்கப்பட்ட பெயர் போன்றவற்றைச் சுற்றி சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. எந்த சினிமா நிகழ்ச்சியாக இருந்தாலும் ‘ஜெய்பீம்’ படத்தைப் பற்றி பேசாமலும் யாரும் செல்வதில்லை. அந்த வகையில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள  ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தற்போது ஒரு படத்துக்கு (ஜெய்பீம்) பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.  ‘ஆன்டி இண்டியன்’ படம் வெளியாகும்போது, அந்தப் படத்தை பற்றி பேசுவார்கள், விமர்சிப்பார்கள். ஆன்டி இண்டியன் படத்திலும் பல சர்ச்சைகள் உள்ளன. இருந்தாலும் இயக்குநர் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். ஒரு படத்தோட கருத்துக்களை சினிமா தியேட்டரிலேயே விட்டுவிட்டு வீட்டுக்கு போக வேண்டும். அதுதான் சிறந்தது.

தற்போதைய சூழலில் உண்மை கதை என்று பெயர்களை மாற்றி எடுக்கக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அப்படி பல படங்களை எடுக்க முடியும்.  தற்போதைய சூழலில் ஓ.டி.டியில்  நிறைய படங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இன்னும் 5 ஆண்டுகள் கழித்து, நடிகர்களின் சம்பளத்தை ஓ.டி.டி நிறுவனங்கள்தான் நிர்ணயிக்கப் போகின்றன” என்று ராதாரவி பேசினார். ‘ஜெய்பீம்’ படம் சர்ச்சையைச் சந்தித்துள்ள நிலையில், அப்படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் இந்த விழாவில் நடிகர் ராதாரவி பேசியிருக்கிறார்.

click me!