Kuberaa Box Office : வசூலை வாரி குவிக்கும் குபேரா.! மூன்று நாள் முடிவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா?

Published : Jun 23, 2025, 08:51 AM IST
dhanush kuberaa movie first day collection box office

சுருக்கம்

குபேரா திரைப்படம் வெளியாகி மூன்று நாள் முடிவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி சாதனை படைத்துள்ளது. 

Kuberaa Movie Box Office Collection

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் குபேரா. தெலுங்கு மற்றும் தமிழில் நேரடியாக உருவாகி மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியானது. வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படம் ரூ.50 கோடி வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சேகர் கம்முலா - தனுஷ் கூட்டணி

சமீப காலமாக நடிகர் தனுஷ் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தனுஷின் ஐம்பதாவது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே எழுதி இயக்கியிருந்தார். இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரும் வெற்றி பெற்றது. ராயன் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்திருந்ததாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அந்தப் படத்தை தொடர்ந்து தனுஷின் 51-வது திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. சேகர் கம்முலா தெலுங்கில் மிகப்பெரிய இயக்குனராவர். அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். எனவே சேகர் கம்முலா தனுஷ் கூட்டணியை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

குபேரா படத்தின் கதை

மேலும் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. படம் ஜூன் 20-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குபேரா படத்தின் கதை குறித்து பார்த்தால் எண்ணெய் நிறுவனம் ஒன்றை தனதாக்கிக் கொள்ள முயலும் தொழிலதிபர் ஒருவர், அரசுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறார். ஆனால் அதை நேரடியாக கொடுக்காமல் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியை வைத்து கொடுக்க முயற்சிக்கிறார். சிபிஐ அதிகாரியோ பணத்தை நேரடியாக கொடுக்காமல் நான்கு கம்பெனிகள் தொடங்கி அதன் மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என்று யோசனை கூறுகிறார். அதன்படியே கம்பெனி தொடங்கப்படுகிறது. வெவ்வேறு இடங்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் கம்பெனியின் இயக்குனர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

குபேரா படம் பற்றிய விமர்சனங்கள்

அதன்படி கீழ் திருப்பதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தனுஷை வரவழைத்து ஒரு கம்பெனியின் இயக்குனராக்குகின்றனர். ஆனால் தனுஷ் பணத்துடன் தப்பித்து விடுகிறார். அவரை நாகார்ஜூனா மற்றும் அவரது ஆட்கள் தீவிரமாக தேடுகின்றனர். அவர் கிடைத்தாரா? பின்னர் என்ன ஆனது? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. இந்த படத்தில் தனுஷ் மற்றும் நாகார்ஜூனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். படம் 3 மணி நேரம் இரண்டு நிமிடம் ஓடுவதால் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. கார்ப்பரேட் கம்பெனிகள், அவர்கள் செய்யும் சதி வேலைகள் என முதல் பாதி வேகமாக நகர்ந்த நிலையில், இரண்டாவது பாதி தேக்கத்தை கண்டது. இருப்பினும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்தனர். தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது.

மூன்று நாட்களில் குபேரா செய்துள்ள வசூல்

இந்த நிலையில் படத்தின் மூன்று நாள் வசூல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. படம் வெளியான முதல் நாள் ரூ.14.75 கோடி வசூலையும் இரண்டாவது நாள் ரூ.16.5 கோடி வசூலையும் பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது நாள் நிலவரப்படி படம் ரூ.17.25 கோடிகள் வசூலித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.50 கோடிகளை வசூல் செய்துள்ளது. குறிப்பாக அதிகபட்சமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வசூல் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆன நிலையில் அதை தொடர்ந்து வார இறுதி நாட்கள் என்பதால் முதல் மூன்று நாட்களில் படம் கணிசமான வசூலைப் பெற்றுள்ளது.

ரூ.50 கோடியை நெருங்கிய குபேரா வசூல்

இந்தப் படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகவும், தனுஷ் படத்தின் சம்பளமாக ரூ.30 கோடி பெற்றதாகவும் கூறப்படுகிறது. வேறு எந்த படங்களும் திரைக்கு வராமல் இருப்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலுக்கு மோசம் இல்லாமல் போட்ட பட்ஜெட்டை குபேரா படம் திருப்பி எடுத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் படக்குழு இதுவரை வசூல் நிலவரங்கள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த தகவல்கள் அனைத்துமே புதிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சில இணையதளங்களின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டவை. நம்பகத் தகுந்த தரவுகள் மற்றும் வசூல் விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!