விமர்சனம் ‘கென்னடி கிளப்’...முதல் படத்தை விட்டு இன்னும் வெளியே வர மறுக்கும் சுசீந்திரன்...

By Muthurama LingamFirst Published Aug 24, 2019, 4:06 PM IST
Highlights

சில இயக்குநர்கள் முதல் பட செண்டிமெண்டிலிருந்து வெளியே வரமுடியாமல் காலாகாலத்துக்கும் தவித்துக்கொண்டிருப்பார்கள். இந்த ’கென்னடி கபடி கிளப்’ம் கூட சுசீந்திரன் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக் குழு’வை விட்டு இன்னும் வெளியே வரமுடியாத பிர்ச்சினைதான். முதல் காதலில் உள்ள நேர்மை அடுத்ததுகளில் இருப்பதில்லை என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.

சில இயக்குநர்கள் முதல் பட செண்டிமெண்டிலிருந்து வெளியே வரமுடியாமல் காலாகாலத்துக்கும் தவித்துக்கொண்டிருப்பார்கள். இந்த ’கென்னடி கபடி கிளப்’ம் கூட சுசீந்திரன் முதல் படமான ‘வெண்ணிலா கபடிக் குழு’வை விட்டு இன்னும் வெளியே வரமுடியாத பிர்ச்சினைதான். முதல் காதலில் உள்ள நேர்மை அடுத்ததுகளில் இருப்பதில்லை என்பதற்கு இப்படமும் ஒரு உதாரணம்.

ஒரு ஸ்போர்ட்ஸ் கதையில் என்னென்னெ இருக்கவேண்டுமோ அத்தனையும் இங்கேயும் இருக்கின்றன. கென்னடி கிளப் என்ற கபடி குழுவை நடத்தி வரும் முன்னாள் ராணுவ வீரரான பாரதிராஜா, அதன் மூலம் ஏழை பெண்களுக்கு தனது சொந்த பணத்தை செலவு செய்து கபடி பயிற்சி அளிப்பதோடு, அவர்களை தேசிய வீராங்கனைகளாக உயர்த்தவும் முயற்சித்து வருகிறார். அப்போது மாநில அளவிலான போட்டிக்கு தயாராகிக்கொண்டிருக்கும் போது, பாராதிராஜாவால் தொடர்ந்து பயிற்சி அளிக்க முடியாத சூழல் ஏற்படும் போது, அவரிடம் கபடி பயிற்சி பெற்றவரும், ரயில்வே அணி வீரருமான சசிகுமார், கென்னடி கிளப் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிப்பதோடு, அவர்களை மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறவும் செய்கிறார். இதற்கிடையே கென்னடி கிளப் அணியில் இருக்கும் வீராங்கனை ஒருவர் இந்திய அணிக்கு தேர்வாக, அவரிடம் தேர்வுக் குழு அதிகாரி லஞ்சமாக ரூ.30 லட்சம் கேட்கிறார். இதனால், அந்த வீராங்கனையால் இந்திய அணியில் விளையாட முடியாமல் போகிறது.

 இந்த நிலையை மாற்ற நினைக்கும் சசிகுமார், தேர்வுக்குழு தலைவரின் ஊழலை அரசுக்கு தெரியப்படுத்தவும், கென்னடி கிளப் வீராங்கனைகளை தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற செய்யவும் களத்தில் இறங்குபவர் அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.விளையாட்டு போட்டிகளை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே, அத்துறைகளில் இருக்கும் ஊழல் மற்றும் அதனால் திறமையானவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை மையப்படுத்தி தான் கதை நகரும். அந்த நகர்வுகளுக்கு எந்த பங்கமும் வந்துவிடாதபடி இந்த கென்னடி குழுவினரும் நகர்ந்திருக்கிறார்கள்.

சசிகுமாரும் பாரதிராஜாவும் இப்படத்துக்கு மிகக் கொடூரமான தேர்வுகள். இருவரும் கபடி பயிற்சியாளர்களாக மனதில் நிற்பதற்கான காட்சிகள் இல்லாமல் போவது பெருத்த ஏமாற்றம். அதிலும், இருவருக்குமிடையே ஏற்படும் ஈகோ அல்லது புரிதல் இல்லாத சூழல், திரைக்கதைக்கு எநதவிதத்திலும் சுவாரஸ்யம் சேர்க்கவில்லை.கபடி வீராங்கனையாக வருபவர்களின் பின்னணி ஏழ்மை என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. பார்த்துப்பார்த்துப் புளித்துப்போன பழைய கெட்டுப்போன மசாலாக் காட்சிகள்.

 கபடி பயிற்சியாளராக இருந்தாலும், பரோட்டாவை வைத்து காமெடி செய்திருக்கும் சூரி, ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். கபடி வீராங்கனையை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் அந்த வாலிபரின் எப்பிஷோட் முழுவதும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், திருமணம் முடிந்த அன்றே போட்டிக்காக மனைவியை வெளியூருக்கு அனுப்பிவிட்டு ஃபீல் செய்யும் போது, ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பு சத்தத்தால் அதிர்ந்து போகிறது.

 டி.இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நம்மை ரொம்பவும் சோதிக்கின்றன. ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவில் கபடி போட்டிகள் தத்ரூபமாக இருக்கிறது.நேர்த்தியான கதை இல்லை என்றாலும், கபடி போட்டிகளில் சினிமாத்தனம் இல்லாமல், நிஜமான போட்டிகளகாவே இயக்குநர் சுசீந்திரன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கென்னடி கபடி கிளப், தேவகி டென்னிஸ் கிளப், கோமளா கோகோ குரூப் என்று எத்தனை படம் எடுத்தாலும் சுசீந்திரன் என்றென்றெக்கும் ‘வெண்ணிலா கபடி குழு’இயக்குநர் என்கிற அடையாளத்தைத் தாண்டி வெளியே வர மாட்டாரோ என்ற பெரும் சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது இப்படம்.

click me!