அதிமுகாவில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றிய செயலாளர், ஏவி ராஜுவின் பேட்டி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து நடிகர் கருணாஸ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்த ஏவி ராஜு என்பவரை கட்சியில் இருந்து நீக்கினார். இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின், அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்களை பற்றி ஒருமையில் பேசி வரும் ஏ.வி.ராஜு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசி இருந்தார்.
இதில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாக இவர் பேசியதற்கு, தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வந்தன. அதே போல் நடிகரும், அரசியல்வாதியுமான கருணாஸ் குறித்தும் மிகவும் அபத்தமான வகையில் பேசி இருந்தார். இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே சம்மந்தப்பட்ட அந்த நடிகை , சமூக வலைத்தளம் மூலம் தன்னுடைய கருத்தை தெரிவித்தது மட்டும் இன்றி, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார்.
அந்த நடிகை தொடர்ந்து, தற்போது நடிகர் கருணாஸ் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மனுவில், "தன்னை பற்றி அவதூறாக அதிமுக முன்னாள் நிர்வாகி, ஏ.வி.ராஜு பேட்டி அளித்துள்ளார். அந்த நடிகை மற்றும் தன்னை தொடர்பு படுத்தி பேசி.. ஏ.வி ராஜு விளம்பரம் தேடி கொள்கிறார். உண்மைக்கு மாறான இந்த பேட்டியால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏ.வி.ராஜு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு வீடியோவில்... தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், அந்த நடிகை போல் ஒரு பெண் வேண்டும் என்று தான் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் கூறியதாக நான் தெரிவித்தேன் என்றும் கூறினார். மேலும் த்ரிஷா குறித்து நான் சர்ச்சைக்குரிய வகைகள் எதையும் கூறவில்லை என்றும், அதையும் மீறி நான் பேசியது யார் மனதையாவது புண் படுத்தி இருந்தார் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று ஏ.வி.ராஜு அந்தர் பல்டி அடித்தது குறிப்பிடத்தக்கது.