விமர்சனம் ‘கனா’... மேன் ஆஃப் த மேட்ச் யார் தெரியுமா?...

By vinoth kumarFirst Published Dec 19, 2018, 12:23 PM IST
Highlights

குளித்தலையைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ். ஒரு கிரிக்கெட் பிரியர். அவரது குட்டி மகள் ஐஸ்வர்யா. பாகிஸ்தானிடம் இந்தியா தோற்கும் ஒரு மேட்ச் சமயத்தில் அப்பா தேம்பி அழுவதைக் காணும் குட்டிப்பெண்ணின் அடி மனதில், எதிர்காலத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் ப்ளேயராகி அப்பாவை மகிழவைக்கவேண்டும் என்ற லட்சியம் துளிர் விடுகிறது.


’ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ படங்களின் வாயிலாக குட்டிப்பாத்திரங்களில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் பல படங்களில் பாடலாசிரியராக பிரபலமாகி ‘கனா’ மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

விமர்சனத்துக்குப்போகுமுன் ஒரு ஸ்பெஷல் சபாஷ் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததற்காக.

குளித்தலையைச் சேர்ந்த விவசாயி சத்யராஜ். ஒரு கிரிக்கெட் பிரியர். அவரது குட்டி மகள் ஐஸ்வர்யா. பாகிஸ்தானிடம் இந்தியா தோற்கும் ஒரு மேட்ச் சமயத்தில் அப்பா தேம்பி அழுவதைக் காணும் குட்டிப்பெண்ணின் அடி மனதில், எதிர்காலத்தில் இந்திய அணியின் கிரிக்கெட் ப்ளேயராகி அப்பாவை மகிழவைக்கவேண்டும் என்ற லட்சியம் துளிர் விடுகிறது.

ஆனால் ஒரு சின்ன கிராமத்தில், தெருவுக்கு பத்து பையன்கள் கிரிக்கெட் ஆடினாலும், பெண்ணுக்கு அது சாத்தியமா என்ன? அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, அவரிடம் செருப்படிகளும் வாங்கி பையன்களுடன் சேர்ந்து பயில்கிறார் ஐஸ்வர்யா. ஊரும் ஓயாமல் ஏளனம் செய்கிறது.

விவசாயம் பொய்த்துப்போகும் நிலையில் கடனுக்கு மேல் கடன் வாங்கி அவமானப்படும் சத்யராஜ், தனது டிராக்டரை விற்று மகளை டீம் செலக்‌ஷனுக்கு அனுப்புகிறார். அடுத்து அங்கே செலக்‌ஷன் டீமில் நடக்கும் பாலிடிக்ஸ்கள், தற்கொலை நிலையில் இருக்கும் சத்யராஜ், டீமிலிருந்து வெளியேற்றப்படும் ஐஸ்வர்யா... இந்தியாவுக்காக ஆடினாரா என்று போகிறது கதை.

ஒரு கிரிக்கெட் கதையில் விவசாயிகளின் பிரச்சினைகளையும் அழுத்தம் திருத்தமாக பேசிய வகையில் முதல் படத்திலேயே  தரமான ஒரு சிக்ஸர் அடித்து தனது தமிழ்சினிமா எண்ட்ரியைத் துவங்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

‘ஜெயிக்கிறேன்னு சொன்னா இந்த உலகம் கேட்காது. ஆனா ஜெயிச்சவன் சொன்னா கேட்கும்’.‘பாஸு பெயிலுங்கறதெல்லாம் சம்பாதிக்க நினைக்கிறவங்களுக்குதான். சாதிக்க நினைக்கிறவங்களுக்கு இல்ல’.’விளையாட்டை சீரியஸ்சா எடுத்துக்கிற இந்தியா, விவசாயத்தை விளையாட்டா கூட எடுத்துக்க மாட்டேங்குது!’ என்று வசனங்கள் படம் முழுக்க உயிர்ப்போடு இருக்கின்றன.

ஐஸ்வர்யாவின் சிறு வயது கிரிக்கெட் ஆர்வக்காட்சிகள் அத்தனையும் ஹைக்கூ வகையறா. சத்யராஜ், அவரது மனைவியாக வரும் ‘என் உயிர்த்தோழன்’ ரமா,  இளவரசு என்று அத்தனை பேரும் வெகு சிரத்தையாய் கதையின் கனம் உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் கோச் நெல்சனாக இறுதி முப்பது நிமிடங்களே வரும் சிவகார்த்திகேயன் அலட்டிக்கொள்ளாமல் மிக நேர்த்தியாக அவரது கேரக்டருக்கு வலு சேர்க்கிறார்.

ஆனால் இறுதி ஓவரில் வுமன் ஆஃப் த மேட்சாக  இப்படத்தின் எல்லாப் புகழையும் மொத்தமாக அள்ளிக்கொண்டு போகிறவரென்னவோ  தலைவி ஐஸ்வர்யாதான். ஒரிஜினல் இந்திய மகளிர் கிரிக்கெட் டீமில் எடுத்துக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு அப்படி ஒரு அநாயசமான நடிப்பு.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, திபு நினன் தாமஸின் இசை, மேட்ச் நடக்கும்போதெல்லாம் ஒவ்வொரு பந்துக்கும் நம்மை சீட் நுனிக்கு நகர்த்தும் ரூபனின் கச்சித எடிட்டிங் என்று ராயல் பேக்கேஜாக வந்திருக்கும் படம் ‘கனா’

படத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால், இருக்கிறது என்று ஒரு டஜனாவது பட்டியல் இடலாம். ஆனால் படம் பேசும் அரசியல் அதற்கெல்லாம் இடம் தரவில்லை. வெல்டன் அருண்ராஜா காமராஜ் அண்ட் சிவகார்த்திகேயன்.

click me!