
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வழக்கமாக நிருபர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக, அதே சமயம் கொஞ்சம் குழப்பமாக பதில் சொல்லும் கமல் நேற்று நடந்த ‘கடாரம் கொண்டான்’ல் கேள்வி பதில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு தப்பி ஓடினார்.
ராஜ்கமல் இண்டர்நேஷனல் - ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவ்வருட பொங்கலன்று வெளியான இதன் டீசர் ரசிகர்களைக் கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கமல்ஹாசன், விக்ரம், ராஜேஷ் M.செல்வா, அக்ஷரா ஹாசன், அபி மற்றும் படத்தில் பணிபுரிந்த பல கலைஞர்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய கமல்,’ராஜ்கமல் நிறுவனம் துவங்கும்போது அக்ஷரா பிறக்கவில்லை. ஆனால் இதுபோல் அமையும் என்று எதிர்பார்த்தோம். அது நடந்து இருக்கிறது. என் முயற்சிகள் எல்லாமே எனக்கு பின்னால் வருபவர்களுக்கும் உபயோகப்பட வேண்டும்.மீரா படம் வெளிவந்த போது விக்ரம் சிறப்பாக வருவார் என்றே சொன்னேன். சேது படம் விக்ரமுக்கு முன்னதாக வர வேண்டிய படம். கடாரம் கொண்டான் படம் பார்த்தேன். நல்ல நடிகரை பார்த்தால் சக நடிகருக்கு பொறாமை வரும். இந்த படத்தை ரொம்ப ரசித்து பார்த்தேன். விக்ரமுக்காகப் இந்த படத்தை பார்க்க வேண்டும்.
சீயான் விக்ரமை இனிமேல் கேகே விக்ரம் என்று அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். ஒரு அரசாங்கம் அமையும் அளவிற்கு நாங்கள் படம் எடுப்போம். ராஜ் கமல் இனிமேல் சிறந்த படங்களை தயாரிக்கும்.ஜூலை 19-ம் தேதி இப்படத்தை வெளியிட இருக்கிறோம். ஹீரோ என்றால் விக்ரம் மாதிரி இருக்கணும். புருஷ லட்சணம் மாதிரி. ஹாலிவுட் நடிகர் போல் விக்ரம் இருக்கிறார்.நல்ல படத்தை ஓட்டிக் காட்டுங்கள். தமிழ் திரைப்படத்தை உலகளவில் கொண்டு செல்லுங்கள்’என்று பேசினார்.
அடுத்து வழக்கம்போல் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியிலிருந்து எஸ்கேப் ஆனார் கமல். அவர் தற்போது கலந்துகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து நிருபர்கள் ஏடாகூடமாக ஏதாவது கேட்பார்கள் என்று நினைத்தே அவர் அதைத் தவிர்த்ததாகத் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.