விமர்சனம் ‘கைதி’...இரண்டாவது படத்தில் கோட்டை விடும் இயக்குநர்கள்...

Published : Oct 25, 2019, 01:37 PM ISTUpdated : Oct 26, 2019, 11:27 AM IST
விமர்சனம் ‘கைதி’...இரண்டாவது படத்தில் கோட்டை விடும் இயக்குநர்கள்...

சுருக்கம்

முதலில் கதையைப் பார்ப்போம். ஒரு கொலைவழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கார்த்தி, நன்னடத்தைக்காக ரிலீஸ் ஆகி தனக்கு இருக்கும் ஒரே சொந்தமான, அனாதை ஆசிரமத்தில் இருக்கும் மகளைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறார். வரும் வழியில் சந்தேகக் கேஸில் போலீஸில் மாட்டும் அவருக்கு அடுத்து பெரும் சோதனை ஒன்று காத்திருக்கிறது.  


மாநகரம் படத்தை இயக்கிய தமிழ் சினிமாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்த லோகேஷ் கனகராஜின் இரண்டாவது படம். கதாநாயகி இல்லாத,பாடல்கள் இல்லாத படம் என்று திகிலூட்டப்பட்ட படம். ஒரு ரெண்டரை மணி நேரத்துக்கு கதாநாயகி இல்லாமல் பாடல்கள் இல்லாமல் கார்த்தியை மட்டும் எப்படி சகித்துக்கொள்வது என்ற கேள்வியுடன் தான் தியேட்டருக்குள் நுழைகிறோம். ஆனால்....?

முதலில் கதையைப் பார்ப்போம். ஒரு கொலைவழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்த கார்த்தி, நன்னடத்தைக்காக ரிலீஸ் ஆகி தனக்கு இருக்கும் ஒரே சொந்தமான, அனாதை ஆசிரமத்தில் இருக்கும் மகளைப் பார்க்க வந்துகொண்டிருக்கிறார். வரும் வழியில் சந்தேகக் கேஸில் போலீஸில் மாட்டும் அவருக்கு அடுத்து பெரும் சோதனை ஒன்று காத்திருக்கிறது.

900கிலோ எடைகொண்ட 840 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை போலீஸ் மடக்கிப் பிடிக்க அதனால் வெறிகொள்ளும் போதை மருந்துக் கும்பல் அதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை வேட்டையாட நினைத்து, அவர்கள் குடிக்கும் மதுவில் விஷத்தைக் கலந்துவிடுகிறது. அந்த அதிகாரிகளை ஒரு லாரியில் கொண்டுபோய் சிகிச்சை அனுமதிக்க வேண்டிய பொறுப்பு கார்த்தியின் தலையில் விடிகிறது. வழியெங்கும் அடியாட்கள் கும்பல் அந்த லாரியை மடக்க முயல அவர்களை எப்படி பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்து போதை மருந்துக் கும்பலை எப்படி ஒழித்தார் என்கிற சுமாரான கதைதான்.

ஆனால் முதல் பத்தாவது நிமிடத்திலியே சீட்டின் நுனியில் உட்காரவைக்கும் இயக்குநர் லோகேஷ், கடைசிக் காட்சி வரை தொய்வு இல்லாமல் ஒரு மிரட்டலான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒரு அதிரடியான ஆக்‌ஷன் படத்தின் ஆணி வேராக இருப்பது அப்பா மகள் செண்டிமென் தான் என்பது படத்துக்கு மிகப்பெரிய பலம்.

நடிப்பைப் பொறுத்தவரை கார்த்தியின் ஆகச் சிறந்த படம் கைதிதான். இயக்குநரை நம்பி தன்னை முழுமையாக ஒப்படைத்ததன் பலன் நிச்சயமாக அவருக்குக் கிட்டியிருக்கிறது. அவருடன் படம் முழுக்கவே பயணிக்கும் நரேனும் தீனாவும் செமையாக நடித்திருக்கிறார்கள். கார்த்தியின் மகளாக நடித்திருக்கும் பேபி மோனிகா தனது நடிப்பால் கண்களைக் குளமாக்குகிறார். அதிலும் இரவில் தூக்கம் வராமல் தன் அப்பாவுக்காக அவர் கலங்கும் காட்சிகள் செல்லுலாயிட் கவிதை வகையறா.

முழுக்க முழுக்க இரவில் அதுவும் ஒரே இரவில் நடக்கும் படம் என்கிற ரிஸ்கை தனது தோளில் சுமந்து அட்டகாசம் பண்ணியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன். சாம் சி.எஸ்.சின் பின்னணி இசையும் மிரட்டல் ரகம்தான்.

கிளைமாக்ஸில் நூற்றுக்கணக்கான வில்லன்களை அர்னால்ட் பாணியில் மெஷின் கன்னால் கார்த்தி துளைத்தெடுத்ததை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்பதைத் தாண்டி இது ஒரு அச்சு அசலான இயக்குநரின் மிரட்டலான படைப்பு என்பதை மார்தட்டிச் சொல்லலாம். வழக்கமால முதல் படத்தை அட்டகாசமாகக் கொடுக்கும் இயக்குநர்களில் பெரும்பாலானோர் இரண்டாவது படத்தில் கோட்டை விடுவார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் தனது கொடியை அழுத்தம் திருத்தமாக தமிழ் சினிமா கோட்டையில் ஏற்றியிருக்கிறார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!