மீண்டும் செவிலியராகும் ஜுலி..! கொரோனாவால் பாதிப்படைந்தவர்களுக்கு சேவையாற்ற ஆர்வம்..!

By Manikandan S R SFirst Published Apr 17, 2020, 7:42 AM IST
Highlights

இக்கட்டான நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தன் மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும் என்று கூறியிருக்கும் ஜூலி செவிலியர் பணியில் ஈடுபடுவதற்காக அரசிடம் விண்ணப்பித்து அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து இன்றைய நிலவரப்படி 12,759 மக்களுக்கு பரவி 420 உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் இருக்கும் அரசு மருத்துவமனைகள், குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தாக்கியவர்களை தனிமையில் வைத்து கவனிக்க தற்காலிகமாக சிறப்பு மருத்துவமனைகள் முக்கிய நகரங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பாதிப்பு அடைந்தவர்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் இரவு பகல் பாராமல் சேவையாற்றி வருகிறது.

இதனிடையே பல தன்னார்வலர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களுக்கு தொண்டாற்றி வருகின்றனர். அதே போல மருத்துவம் சார்ந்த துறைகளில் பணியாற்றிவிட்டு தற்போது வேறு துறைகளில் இருப்பவர்கள் பலர் தாமாக விரும்பி வந்து கொரோனாவால் தாக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நடிகை ஜுலி மீண்டும் தனது செவிலியர் பணிக்கு திரும்ப ஆர்வம் தெரிவித்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் நடிகை ஜூலி. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சின்னத்திரையில் வலம் வந்தவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றினார். அதன்பிறகு படவாய்ப்புகள் வரவே தற்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக செவிலியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல தன்னார்வலர்கள் தொண்டு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜூலியும் நர்ஸ் பணிக்கு திரும்புவாரா? என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். அதுகுறித்து பதில் அளித்திருக்கும் ஜூலி நர்ஸ் பணி என்பது வெறும் வேலை கிடையாது என்றும் அது ஒரு சேவை என கூறியிருக்கிறார். இக்கட்டான நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தன் மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும் என்று கூறியிருக்கும் ஜூலி செவிலியர் பணியில் ஈடுபடுவதற்காக அரசிடம் விண்ணப்பித்து அனுமதிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

click me!