'ஜெயிலர்' படத்தின் வெற்றியால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் உற்சாகமாக உள்ள நிலையில், தற்போது ரஜினிகாந்தை சந்தித்து கலாநிதி மாறன் செக் ஒன்றை பரிசாக கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். முக்கிய கதாபாத்திரத்தில் வசந்த் ரவி, மிர்ணா,யோகி பாபு, விநாயகன், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குறிப்பாக மலையாள நடிகர் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
இந்தத் திரைப்படம் வெளியானது முதலே, தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும், உலக நாடுகளிலும், தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அண்டை மாநிலங்களில் மட்டும் ஜெயிலர் திரைப்படம் 200 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் அமெரிக்காவில் முந்தைய கோலிவுட் படங்களின் வசூல் சாதனையை ஜெயிலர் திரைப்படம் முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. மூன்று வாரங்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக 'ஜெயிலர்' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. 700 கோடியை நெருங்குமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்தப் படத்தின் வெற்றியால், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து 'ஜெயிலர்' படத்தின் வரலாற்று சாதனையை கொண்டாடும் விதமாக, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசாக செக் ஒன்றை ரஜினிகாந்திடம் வழங்கி உள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் ஏற்கனவே ஜெயிலர் படத்தின் வெற்றியால், அடுத்ததாக நெல்சன் இயக்கும் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயிலர் வெற்றியால் ரஜினிகாந்துக்கு பரிசு கொடுத்து கலாநிதி மாறன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளதால், விரைவில் நெல்சனுக்கும் கலாநிதி மாறன் என்ன பரிசு வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாநிதி மாறன் சந்தித்த போது, எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கலாநிதி மாறன் வழங்கிய செக்கில் ரெக்கார்டு மேக்கர் என்கிற வார்த்தை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்துக்கு கலாநிதி மாறன் எவ்வளவு தொகை கொடுத்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை .