Jai Bhim: வாய் திறந்த திரைப்பட வர்த்தக சபை.. சூர்யாவை விமர்சிப்பதை நிறுத்துங்க.. அன்புமணிக்கு கடிதம்.!

By Asianet TamilFirst Published Nov 15, 2021, 10:17 PM IST
Highlights

"அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்துக்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது."

சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் நடிகர் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை கடிதம் எழுதியுள்ளது.

சூர்யா தயாரிப்பு, நடிப்பிலும் ஞானவேல் இயக்கத்திலும் வெளியான‘ஜெய் பீம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. 1994-ஆம் ஆண்டில் கடலூரில் நடைபெற்ற ஓர் உண்மைச் சம்பவத்தை மையாக வைத்து இந்தப் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். படம் வரவேற்பைப் பெற்ற போதிலும், உண்மை நிகழ்வில் அந்தோணிசாமி என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தை குருமூர்த்தி என்று மாற்றியதும், வன்னியர்களின் பண்பாட்டுச் சின்னமான அக்னி சட்டி காலாண்டர் இடம்பெற்றதும் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து அந்த காலண்டர் காட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை எழுப்பி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதத்துக்கு நடிகர் சூர்யாவும் பதில் கடிதம் எழுதியிருந்தார். இதற்கிடையே நடிகர் சூர்யாவை முதலில் எட்டி உதைப்பவருக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்றும் வன்னியர் சங்கம் சார்பில் சூர்யாவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு எதிராக சமூக ஊடங்களில் பாமகவினர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த விஷயத்தில் திரையுலகம் அமைதியாக இருப்பதாகவும் பலர் விமர்சித்தனர். இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபை  தலைவர் கட்ரகாட்டா பிரசாத், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்களால் காண்பிக்கப்பட்ட தங்கள் கட்சியின் முத்திரையை நீங்கள் அடையாளப்படுத்தி அதை நீக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தீர்கள். எங்களுடைய தென்னிந்திய திரைப்பட வர்த்தகச் சபையில் உறுப்பினர் சூர்யா, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்தக் காட்சியை உடனடியாக நீக்கிவிட்டார்.

அந்த முத்திரையைப் படத்தில் பயன்படுத்தியதில் தயாரிப்பு நிறுவனத்துக்கோ படத்தின் கதாநாயகன் சூர்யாவுக்கோ எள்ளளவும் தொடர்பு இல்லாத நிலையில் உங்கள் கட்சியினர் சூர்யாவை தொடர்ந்து விமர்சித்து வருவது, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. அரசியல், சாதி, மத, இன, சார்பின்றி சமூக அக்கறையோடு ஈகை குணத்துடன் விளிம்பு நிலை மாணவர்கள் மீது விருட்சமான பார்வை கொண்டு கல்விப் பணியில் கலங்கரை விளக்காய் செயலாற்றி வரும் சூர்யாவை விமர்சிப்பதை தவிர்க்கும்படி வருத்தத்துடன் வேண்டிக்கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!