
சமூக அநீதிகளை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற ஜெய் பீம் சூர்யாவின் உன்னதமான எண்ணத்தை பாராட்டுகிறேன்.
நடிகர் சூர்யாவின் சொந்த தயாரிப்பில் அவரே நடித்து, த.செ.ஞானவேல் இயக்கிய படம் Jai Bhim. 1990-களில் நடந்த உண்மை சம்பவத்தை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம் தீபாவளிக்கு ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பல்வேறு தரப்பினரும் இயக்குனரையும், சிறந்த படைப்பை தந்த நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் அவரது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவையும் பாராட்டி வருகின்றனர்.
பெரும் வெற்றியை பெற்றதோடு, பெரும் லாபமும் ஈட்டியுள்ள ஜெய் பீம் படம் பெரிய சர்ச்சைக்குள்ளும் சிக்கியிருக்கிறது. உண்மைக் கதை என்று கூறிவிட்டு, திட்டமிட்டே தங்கள் சமுதாயத்தின் மீது சேற்றை வாரி வீசியிருப்பதாக வன்னியர் சமூகத்தினர் பொங்கியெழுந்துள்ளனர். காவல் ஆய்வாளரின் உண்மையான பெயரை மாற்றி குருமூர்த்தி என்ற பெயரை வைத்தது, அவரது வீட்டில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசம் படம் இருக்கும்படி செய்தது என வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டு இருப்பதாக தங்கள் குமுறல்களையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகிறனர்.
ஜெய் பீம் சர்ச்சைகள் தொடர்பாக பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.-யுமான அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்பியிருந்தார். அதற்கு விளக்கமளித்த சூர்யா சிறந்த படைப்பை பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். சூர்யாவின் செயல்பாடுகளால் அவர் சார்ந்த கவுண்டர் சமுதாயமும் வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் அராஜகங்களை தோலுரித்து காட்டிய Jai Bhim திரைபப்டம் தற்போது சாதிய மோதல்களை உருவாக்கும் களமாக மாறியிருக்கிறது.
இந்தநிலையில் தான், சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், ஜெய் பீம் படத்தையும், நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவை பாராட்டித்தள்ளியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெய் பீம் படம் பார்த்தேன், நடந்த சம்பவங்களை, சரித்திர நிகழ்வுகளை மறந்த நிலையில், நீதியரசர் சந்துரு அவர்களின் சமூக அக்கறையை, உலகம் மறந்து விடக்கூடாது என்ற சிறந்த நோக்கத்தோடும், சமூக அநீதிகளை பிரபலங்கள் எந்த ஒரு தயக்கம் இல்லாமல் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என்ற "ஜெய் பீம்". சூர்யாவின் உன்னதமான எண்ணத்தை முதலில் பாராட்டுகிறான்.
சரித்திரங்கள் மறப்பதற்கு அல்ல. அவை கற்றுக்கொடுக்கும் பாடங்களை உலகறியச் செய்ய வேண்டும் . அப்போதுதான் நல்ல எண்ணங்கள், நாட்டுப்பற்று, சமூக ஒழுக்கம், சமூக நீதி, சமத்துவம் நிலைநாட்டப்படும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ராசாக்கண்ணுவின் வழக்கும், அவரது மரணமும். நீதியை நிலைநாட்டப் போராடிய அவரது மனைவியும், நீதி தோற்று விடக்கூடாது என்று போராடிய சந்துருவைப் போலவும், பெருமாள்சாமியைப் போலவும் நாட்டில் பலர் தோன்றவேண்டும். நீதி அனைவருக்கும் பொது. இதில் ஏற்றத்தாழ்வு, ஏழை பணக்காரன், சாதி, மத, பேதங்கள் கூடாது என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் நாடு உண்மையான சுதந்திர நாடு. சிறந்த படைப்பை தந்த சூர்யாவை போற்றுகிறேன், ஞானவேலை வாழ்த்துகிறேன். ராசாக்கண்ணு, செங்கேணி, தமிழ், சூப்பர்குட் சுப்பிரமணி மற்றும் பாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் சக கலைஞர்கள் அனைவரையும் என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து போற்றுகிறேன் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜெய்பீம் திரைப்படம் சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வன்னியர்கள் மற்றும் கவுண்டர் சமுதாய இளைஞர்களிடையே மோதலை உண்டாக்கியிருக்கிறது. இச்சூழலில் தலித்திய ஆதரவாளர்கள் நடிகர் சூர்யாவின் பக்கம் நின்று கருத்துகளை கூறி வருகின்றனர். அதேபோல் வன்னியர்களுக்காக பிற சமூகத்தவர்களும் ஆதரவாக பேசி வருகின்றனர். இந்தநிலையில் நாடார் சமுதாய மக்களுக்கான கட்சியாக பார்க்கப்படும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், ஜெய் பீம் படத்தை புகழ்ந்து தள்ளியிருப்பது, வன்னியர் சமூக இளைஞர்களின் கோபத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. போலீஸ் அராஜகத்தை கூறவந்த திரைப்படம், ஒரு சில சர்ச்சை காட்சிகளாலும், பெயர் அரசியலாலும் சாதிச் சண்டை மைதானமாக மாறியிருப்பதாக பலரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.