தமிழ் நடிகைகளின் இட்லி, சாம்பார், ரசம்... சிலாகிக்கும் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப்...

By Muthurama LingamFirst Published Jan 30, 2019, 10:51 AM IST
Highlights

தமிழ்சினிமாவில் பெரும்கவனத்தை ஈர்த்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃபின் பாத்திரம் மறக்கமுடியாதது. அடுத்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் ஜாக்கி ஷெராஃப். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அகோரி வேடத்தில்  அவர் நடிக்கும் ’பாண்டி முனி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழ்சினிமாவில் பெரும்கவனத்தை ஈர்த்த ‘ஆரண்ய காண்டம்’ படத்தில் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃபின் பாத்திரம் மறக்கமுடியாதது. அடுத்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ்ப்படத்தில் ஜாக்கி ஷெராஃப். கஸ்தூரி ராஜா இயக்கத்தில் அகோரி வேடத்தில்  அவர் நடிக்கும் ’பாண்டி முனி’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. படப்பிடிப்பில் அகோரி வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார் ஜாக்கி ஷெராப் .

சாதாரண நடிகர்கள் கூட  தன்னை மிக உயர்ந்தவர்களாக காட்டிக் கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மிக உயர்ந்த இடத்தில் மதிக்கக் கூடிய நிலையில் இருக்கும் ஜாக்கி சாதாரண மனிதனாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தது ஆச்சர்யம் தான்.எல்லோருடனும் செல்பி எடுத்துக் கொண்டிருந்த அவரை மடக்கி பேசினோம்.

இதில் நான் அகோரியாக நடிக்கிறேன். டைரக்டர் கஸ்தூரிராஜா கதையை சொன்னவுடன் இது எனக்கு புது மாதிரியான கேரக்டராக இருக்கும் என்று நினைத்து ஓ.கே.சொன்னேன். ’ஆரண்ய காண்டம்’ மாயவன் மாதிரி இது வேறு ஒரு கதைக்களம்.என் உருவத்தை மட்டும் அல்ல..என் நடை உடை பாவனை எல்லாவற்றையுமே இது மாற்றும் படமாக இருக்கும்..

டைரக்டர் என்ன சொன்னாரோ அதை அப்படியே நான் பிரதிபலிக்கிறேன். நானாவது இந்த கதையில் ஆறு மாதங்கள் தான் ஊறி இருக்கிறேன்.ஆனால் இயக்குனர் ஆறு ஆண்டுகளாக இதை டிரீம் சப்ஜெக்டாக சுமந்து கொண்டிருக்கிறார். சிவபக்த அகோரியாக நடிக்கிறேன். நல்லது செய்யும் முனீஸ்வரன் என்ற அகோரிக்கும் எல்லோரையும் அழிக்க நினைக்கும் பாண்டி என்கிற பேய்க்கும் நடக்கிற போராட்டம் தான் கதை.  அகோரி என்றால் ஆ...ஊ என்று கத்தி கலாட்டா செய்யும் அகோரி வேடமல்ல. அமைதியால் எதையும் வெல்ல முடியும் என்கிற சிவ பக்த அகோரி வேடம். எனக்கே இது புது வேடம் தான் டைரக்டர் சொன்னதை சிறப்பாக செய்திருப்பதாக உணர்கிறேன்.

நான் அடிக்கடி சென்னை வருவேன். 80ம் வருட நடிகர் நடிகைகள் சந்திப்பு நடக்கும் போதெல்லாம் வருவேன். ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் அவரவர் வீட்டிலிருந்து இட்லி, சாம்பார், ரசம் என்று எடுத்து வந்து பரிமாறி அசத்தி விடுவார்கள்.ரேவதி, ராதிகா எல்லாம் எனக்கு நல்ல நண்பர்கள். நிறைய பேர் அந்த நடிகை இந்த நடிகை எப்படி டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் பேர் எல்லாம் எனக்கு தெரியாது.நான் நிறைய படங்களை பார்ப்பது கிடையாது.

எல்லோருமே சிறப்பாக நடிக்கிறார்கள். நல்லா டான்ஸ் ஆடுகிறார்கள்.இல்லா விட்டால் சினிமா துரத்தி விட்டிருக்குமே. என்னை பொருத்தவரை இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தான் என் எஜமானர்கள். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் என்னை உட்புகுத்தி அதற்கு சம்பளம், உடை ,சாப்பாடு கொடுக்கிற அவங்களை என்றைக்கும் நான் மறக்க மாட்டேன்’ என்கிறார் ஜாக்கி ஷெராஃப்.
 

click me!