
சமீப காலமாக இந்தியாவில் போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. போதை ஆசாமிகளால் வயது வித்தியாசம் இன்றி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். போதை காரணமாக கொலை, கொள்ளை உட்பட குற்றச்சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண மனிதர்கள் தொடங்கி, திரைப் பிரபலங்கள் வரை போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணையில் ‘கழுகு’ பட நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் அடிபடுகிறது.
இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. போதைப் பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் சிக்குவது இது முதல் முறை அல்ல இதற்கு முன்பு பல நடிகர்கள் போதை வழக்கில் சிக்கியுள்ளனர். பிரபல கன்னட நடிகைகளாக இருந்த ராகினி திவேதியும், சஞ்சனா கல் ராணியும் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். போதைப் பொருட்களை பயன்படுத்துதல் மற்றும் அதனை விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததற்காக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நான்கு மாதம் சிறை தண்டனை அனுபவித்த பின் அவர்கள் பின்னர் ஜாமினில் வெளியே வந்தனர்.
கேரள திரையுலகில் அண்மையில் போதை பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் அடுத்தடுத்து பிரபலங்கள் சிக்கினர். நடிகர் ஷைன் டாம் சாக்கோ தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருகிறார். அவர் தங்கி இருந்த ஹோட்டலில் காவல்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹோட்டலின் மூன்றாவது மாடி ஜன்னலில் இருந்து குதித்து ஷைன் டாம் சாக்கோ தப்பிய சிசிடிவி காட்சிகள் வைரலானது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகவும் அவர் மீது வழக்குகளும் பதியப்பட்டது. சமீபத்தில் குடும்பத்துடன் காரில் தருமபுரி அருகே சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இவருக்கு பயங்கர காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். விபத்தில் அவரது தந்தை உயிரிழந்தார்.
2017 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் தெலுங்கு நடிகர்களிடம் அதிக அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நடிகைகள் ஷார்மி முமைத் கான், நடிகர்கள் தருண்குமார், நவ்தீப் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரபல தெலுங்கு பாடகி மங்கிலி தன்னுடைய பிறந்தநாள் பாட்டியில் போதைப் பொருட்களை விநியோகித்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மேற்கொண்ட சோதனையில் 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பார்ட்டியில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகள் மற்றும் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து பாடகி மங்களின் மீது பல்வேறு வழக்குகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் பார்ட்டிக்கு வருவதற்கு முன்பே கஞ்சா பயன்படுத்தி இருந்திருக்கலாம் என மங்கிலி விளக்கம் அளித்து இருந்தார்.
2021 ஆம் ஆண்டு மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் கஞ்சா பயன்படுத்தப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அப்போது காவலர்கள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 25 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஆரியன் கான் வெளியில் வந்தார். அதேபோல் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு காரணமாக சொல்லப்பட்ட அவருடைய முன்னாள் காதலி ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் சௌவிக் சக்கரவர்த்தி போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் அமன் ப்ரீத் சிங் கொக்கைன் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஹைதராபாத் காவல் துறை அதிகாரிகள் அமன் ப்ரீத் சிங் உள்ளிட்ட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் ஹிந்தி நடிகர் அர்மான் கோலி, தயாரிப்பாளர் அர்பித் மெண்டி, பிரபல பிரபல ஹிந்தி சீரியல் நடிகை காமியா பஞ்சாபி, தெலுங்கு நடிகர் ரவி தேஜா, தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், தெலுங்கு நடிகர்கள் நௌதீப், தனிஷ், சுப்ரம் ராஜு, நந்து போன்ற பலர் மீது போதைப்பொருள் வழக்குகள் பதியப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.