
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்துள்ள திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்த படம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் ரூ.50 கோடி வசூலை கூட தாண்டவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் பல முன்னணி நடிகர்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் சூரியின் ‘மாமன்’ திரைப்படம், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவந்த் இயக்கிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற சிறிய பட்ஜெட் படங்களின் வசூலைக் கூட தாண்ட முடியாமல் திண்டாடி வருகிறது. 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் மணிரத்னம் கூட்டணியில. உருவாகியிருந்த இந்த படம் இவ்வளவு பெரிய தோல்வியை சந்திக்கும் என்று யாருமே நினைத்துப் பார்க்கவில்லை.
இளம் இயக்குனர்கள், அறிமுக இயக்குனர்கள், அறிமுக நடிகர்கள், இளம் தலைமுறை நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸில் சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில் வெளியான தனுஷின் ‘குபேரா’ திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.55 கோடி வசூலை குவித்துள்ளது. ஆனால் வெளியாகி பல நாட்களாக ரூ.50 கோடி வசூலை கூட நெருங்க முடியாமல் ‘தக் லைஃப்’ திணறி வருகிறது. இந்த படத்தின் புரோமோஷன்காக படக்குழுவினர் ஒரு மாத காலமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். படம் வெளியான பின்னர் யாருமே வெளியில் தலை காட்ட முடியாத அளவிற்கு படம் தோல்வியை சந்தித்துள்ளது. படம் குறித்து இதில் நடித்த நடிகர்களோ அல்லது பிற கலைஞர்களோ எதுவுமே பேச முடியாமல் அமைதி காத்து வருகின்றனர். படம் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து இணையதளத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்தத் திரைப்படத்தில் குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர், நடிகர் ரகுமானின் மகள் அலிஷா ரகுமான், ‘லப்பர் பந்து’ பட ஹீரோயின் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உதவி இயக்குனர்களாக பணியாற்றினர். ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கு இயக்குனருடன் உதவி இயக்குனர்களின் பங்கும் இருக்க வேண்டும். திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டால் அந்த இடங்களை சுட்டிக்காட்டி உதவி இயக்குனர்கள் இயக்குனருக்கு உதவிகரமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் மணிரத்னம் சொன்ன விஷயங்களை மட்டுமே கேட்டு செயல்பட்டதாகவும், இயக்குனருக்கு எடுத்துச் சொல்லும் அளவிற்கு யாருமே இல்லாத நிலையில் இந்த திரைப்படம் திரைக்கதையில் சொதப்பியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் படத்தின் தோல்வி குறித்து முதல்முறையாக மணிரத்னம் பேசியுள்ளார். தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “தக் லைஃப்’ படத்தின் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக வைத்திருந்தனர். 38 ஆண்டுகளுக்குப் பின் ‘நாயகன்’ படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் இந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். ஆனால் ‘நாயகன்’ போன்றே ஒரு படத்தை கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. வேறு மாதிரியான சோதனையை மேற்கொண்டோம். ஆனால் ரசிகர்கள் ‘நாயகன்’ போன்ற படத்தையே எதிர்பார்த்தனர். இதுவே அவர்கள் ஏமாறுவதற்கான காரணம். அதற்காக நாங்கள் இருவருமே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என கமலுக்கும் சேர்த்து மணிரத்னம் மன்னிப்பு கோரியுள்ளார்.
‘தளபதி’ படத்திற்குப் பின்னர் ரஜினிகாந்தை வைத்து எந்த படத்தையும் மணிரத்னம் இயக்கவில்லை. எனவே ‘தக் லைஃப்’ படம் முடிந்த பிறகு ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தது. ஆனால் தற்போது ரஜினிகாந்த் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முடிவுகளைப் பார்த்து மணிரத்னத்துடன் இப்போதைக்கு இணைய வேண்டாம் என மறுத்து விட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. தமிழ் திரையுலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்த ஏ.ஆர் முருகதாஸ், ஹரி, ஷங்கர் ஆகியோர் அவுட்டேட் ஆகிவிட்டனர். இவர்களின் பெரும்பாலான படங்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. அவர்களின் வரிசையில் தற்போது மணிரத்னமும் இணைந்துள்ளார். இந்த இயக்குனர்கள் இன்றைய தலைமுறை ரசிகர்களை கவரும் வண்ணம் திரைப்படங்கள் எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ரசிகர்களை கவரும் வகையிலான வேகமான திரைக்கதை, திருப்புமுனைகளுடன் கூடிய கதைகள், குடும்பப்பாங்கான கதைகள், ஃபீல் குட் மூவிகள் போன்றவற்றையே தற்போது மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இது மட்டும் இல்லாமல் திரில்லர், கிரைம் படங்களும் மக்களால் விரும்பி பார்க்கப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு பழைய இயக்குனர்கள் அரைத்த மாவையே அரைத்து தமிழ் ரசிகர்களை சலிப்பை ஏற்படுத்துகின்றனர். அதற்கு மணிரத்னமும் விதிவிலக்கு அல்ல என்பதை ‘தக் லைஃப்’ படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். கமலஹாசன், சிம்பு போன்ற சிறந்த கலைஞர்களை வைத்து ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்திருந்தால் இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படமாக மாறி இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.