நீங்க சும்மாவா கச்சேரி பண்ணுறீங்க … காசு வாங்குறீங்கள்ல… அப்ப எனக்கு ராயல்டி கொடுங்க !! இளையராஜா மிரட்டல் !!

By Selvanayagam PFirst Published Nov 28, 2018, 8:13 AM IST
Highlights

தனது பாடல்களை இசைக் கச்சேரிகளில் பாடும்போது பணம் கிடைத்தால் அதில் எனக்கும் பங்கு வேண்டும் என்றும், தனது அனுமதி பெறாமல் பணம் வாங்கிக் கொண்டு கச்சேரியில் பாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படம் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள  வீடியோவில் , இசைக் கலைஞர்களே ஒரு புதிய அறிவிப்பு, என்னுடைய பாடல்களை என் முன் அனுமதியில்லாமல் பாட விரும்பும் இசைக்கலைஞர்கள் என்னிடம் முன் அனுமதி பெற்று அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன்பின் பாடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

இல்லையென்றால் அது சட்டப்படி குற்றமாகும். அப்படி செய்வது தவறு என்பதை நீங்கள் உணரவேண்டும். அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுவரை ஐ.பி.ஆர்.எஸ். -இல் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது ஐ.பி.ஆர்.எஸ். இல் உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து வந்த ராயல்டி தொகையை இனி தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். நான் அவர்களுக்கு அந்த உரிமையை வழங்கி இருக்கிறேன்.

 

எல்லாரும் இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொள்ள, நீங்கள் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்திற்குதான் ராயல்டி தொகையே தவிர, நீங்கள் பாடுகிற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை.

நீங்கள் பாடுவது இலவசமாக பாடினால், இலவசமாக பாடி விடலாம், பணம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இதை சரியாக புரிந்துகொள்ளுங்கள், இது ஒரு சின்ன விஷயம். பணம் வாங்குகிறீர்கள் அல்லவா, சும்மாவா கச்சேரி செய்கிறீர்கள். என் பாட்டிற்கு நீ பணம் வாங்குகிறீர்கள், அந்த பணத்தில் எனக்கு பங்கு இல்லையா. பாட்டே எனது என்றபோது, பங்கு எப்படி எனது இல்லாமல் போகும். பங்கு என்ன ஒரு சின்ன தொகை, ஒரு பேருக்குதான கேக்குறது சட்டப்படி இருக்கணும் அப்படிங்கிறதுக்காக. நாளை வருகிற தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும், முன்னோட்டமாக, முதலடி எடுத்து வைத்ததாக ஆகும் என்பதை புரிந்துகொள்ளுங்கள் என இளையராஜா தெரிவித்துள்ளார்.. 

ஏற்கனவே எகோ என்ற நிறுவனத்தினுடனான பிரச்சனை, இளையராஜா பெயரில் நடைபெற்ற வானொலி நிறுவனத்தை நிறுத்தியது என கடந்த சில ஆண்டுகளாக தன் பாடல்கள் மீதான காப்புரிமையில் மிக கவனமாக இருக்கிறார், இளையராஜா.

click me!