Ilaiyaraaja : என்னை இசைஞானி ஆக்கியது கருணாநிதி தான்... அவர் எனக்கு அப்பா மாதிரி - இளையராஜா உருக்கம்

By Asianet Tamil cinemaFirst Published Jun 3, 2022, 11:15 AM IST
Highlights

Ilaiyaraaja : கலைஞர் கருணாநிதி வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நாட்டை வழிநடத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா நேற்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டு கோவை கொடிசியா மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட இளையராஜா, பல்வேறு பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்ததோடு, தனக்கு இளையராஜா என பெயர் வந்தது எப்படி என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்களையும் தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது : எனக்கு என் அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஜாதகம் பார்த்து அவர் அந்த பெயரை எனக்கு வைத்தார். பின்னர் பள்ளியில் படிக்கும் போது அழைப்பதற்கு ஈஸியாக இருக்கிறது என்பதற்காக ராசையா என மாற்றினார்கள். நான் இசை கற்றுக்கொள்ள சென்றபோது எனது ஆசிரியர், நோட்டில் எழுதும் போது உன் பெயர் என்னடா என கேட்டார்.

அப்போது ராசையா என்றேன். உடனே அவர் ராசையா நல்லா இல்லை நீ ராஜா என மாத்திக்கோனு சொன்னார். நானும் சரினு சொல்லிட்டேன். அப்புறம் சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு கிடைச்சதும் என்ன பெயர் போட போறீங்கனு கேட்டாங்க, நான் பாவலர் பிரதர்ஸ்னு போடுங்கனு சொன்னேன். அதெல்லாம் பழைய பெயர். நீ ராஜானே போட்டுக்கோனு சொன்னாங்க. 

ஏற்கனவே ஏவிஎம் ராஜா இருக்கிறார். அவர் மூத்த ராஜாவா இருக்கட்டும், நீ இளைய ராஜானு வச்சிக்கோனு சொல்லி தான் இந்த பெயர் எனக்கு வந்துச்சு. இது நான் வைத்த பெயர் இல்லை எனக் கூறினார். மேலும் கலைஞர் குறித்து பேசுகையில் அவர் கூறியதாவது : எனக்கு இசைஞானி என பெயர் வைத்த கருணாநிதி என் தந்தைக்கு சமமானவர் ஆவார். என் தந்தை வைத்த ஞான தேசிகன் என்ற பெயரில் அவர் இசையை சேர்த்துவிட்டார்.

அவர் வழியில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நாட்டை வழிநடத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் இந்த மக்களுக்கு செய்வதை எல்லாம் எனக்கு செய்ததாக எடுத்துக் கொள்கிறேன்” என பாராட்டி பேசியுள்ளார் இளையராஜா.

இதையும் படியுங்கள்... காலத்தால் அழியாத கலைஞரின் சினிமா... சினிமாவில் சிங்கம் போல் கர்ஜித்த கருணாநிதியின் திரையுலக பயணம் ஒரு பார்வை

click me!